கருங்கற்களால் அமைக்கப்பட்ட புதுமையான வீடு


கருங்கற்களால்  அமைக்கப்பட்ட  புதுமையான  வீடு
x
தினத்தந்தி 22 Sep 2017 10:30 PM GMT (Updated: 22 Sep 2017 11:12 AM GMT)

பழைய காலங்களில் கருங்கற்கள், சுண்ணாம்பு மற்றும் இயற்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி அமைக்கப்பட்ட கட்டிடங்கள் இன்றும் உறுதியாக இருப்பதை பலரும் கவனித்திருப்போம்.

ழைய காலங்களில் கருங்கற்கள், சுண்ணாம்பு மற்றும் இயற்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி அமைக்கப்பட்ட கட்டிடங்கள் இன்றும் உறுதியாக இருப்பதை பலரும் கவனித்திருப்போம். குறிப்பாக பழங்கால கோவில்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கற்களால் அமைக்கப்பட்டு இன்றும் நிலைத்து நிற்பதை மனதில் கொண்டு, தருமபுரி பகுதியில் உள்ள சரவணன் என்பவர் தனது வீட்டை முற்றிலும் கருங்கற்களால் அமைத்திருக்கிறார்.

தகுந்த திட்டம்

தண்ணீர் தேவைகளுக்காக கிணறு, மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்கான நில மட்ட அளவிலுள்ள கிணறு, காற்றோட்டம் மற்றும் இயற்கை வெளிச்சம் கட்டமைப்புக்குள் சுலபமாக வருவதற்கேற்ற வகையில் தக்க ஜன்னல்கள் அந்த வீட்டில் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளன. ரெயில்வே துறையில் பணிபுரியும் சரவணனுக்கு கட்டுமான தொழிலில் கிடைத்த நீண்ட அனுபவத்தின் அடிப்படையில், உள்ளூர் கட்டுமான பணியாட்கள் மூலம் அஸ்திவாரம் முதல் மேற்கூரை வரை கருங்கற்களை பயன்படுத்தி அவரது ஒட்டுமொத்த வீட்டையும் கட்டியிருக்கிறார்.

வடிவமைப்பு தொழில்நுட்பம்

சென்னையில் உள்ள பழங்கால கட்டிடங்களின் வடிவமைப்பு தொழில்நுட்பமான இந்தோ–சாராசெனிக் முறையில் அவர் வீடு கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களை கொண்டதாக உள்ள அந்த வீட்டை அமைப்பதற்கு அவரது உறவினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுவர் அமைப்புகள்

அந்த வீட்டிற்காக உள்ளூர் பகுதிகளிலிருந்து ஒட்டுமொத்தமாக 70ஆயிரம் கருங்கற்கள் மற்றும் சிவப்பு நிற கற்கள் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன. வழக்கமான செங்கல் சுவர் என்றால் வேண்டிய இடத்தில் ஆணிகள் அடிப்பது உள்ளிட்ட இதர பணிகளை செய்ய வசதியாக இருக்கும். ஆனால், கருங்கல் சுவரில் அவை சாத்தியமில்லை என்ற நிலையில், வீட்டின் முழு வடிவமும் முன்னரே திட்டமிடப்பட்டு அதற்கேற்ப சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிமெண்டு கலவை

மேலும், கற்களுக்கு இடைவெளியில் கடுக்காய், மண், சுண்ணாம்பு பிளாக் ஆக்சைடு (சிமெண்டு போன்ற கலவை) மற்றும் சிமெண்டு 5 சதவீகிதம் என்ற அளவுகள் கொண்ட கலவை மூலம் தயார் செய்யப்பட்ட கலவை மூலம் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது. பொதுவாக செங்கல் சுவர்கள் முக்கால் அடி என்ற அகலத்தில் இருக்கும் நிலையில் கருங்கல் வீட்டின் சுவர்கள் அனைத்தும் 2 அடி 6 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கார் பார்க்கிங், சமையலறை, மூன்று பெட்ரூம், பூஜை அறை ஆகியவை தரைத்தளம் மற்றும் இதர இரண்டு தளங்களிலும் வெவ்வேறு விதமான கற்சுவர் அமைப்புகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தலை வாசல்

காரைக்குடி பகுதியில் புழக்கத்தில் உள்ள பாரம்பரிய கதவு வடிவமைப்பான ராஜநிலவு என்ற பல்வேறு சிற்பங்கள் கொண்டதாக கதவு மற்றும் நிலைகள் வீட்டின் தலை வாசலில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பழைய வீட்டில் இருந்த 100 அடி ஆழம் கொண்ட கிணறை, மண் போட்டு தூர்த்து விடாமல் மழை நீர் சேகரிப்பு தொட்டியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சமையறை கழிவு நீர் மற்றும் குளியலறை கழிவு நீர் ஆகியவை சுத்திகரிக்கப்பட்டு அந்த கிணற்றுக்குள் செல்லும் வகையில் குழாய் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story