ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது


ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 18 Jan 2017 9:09 PM GMT (Updated: 18 Jan 2017 9:09 PM GMT)

ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.

பெர்த்,

ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.

3–வது ஒருநாள் போட்டி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெல்போர்னில் நடந்த 2–வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

முகமது ஹபீஸ்

அசார் அலி காயத்தால் விலகியதால் முகமது ஹபீஸ் தலைமையில் 2–வது போட்டியில் களம் கண்ட பாகிஸ்தான் அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியை சுவைத்தது. அந்த நம்பிக்கையுடன் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி களம் இறங்கும். காயம் குணமடையாததால் அசார் அலி இந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. முகமது அமிர், ஜூனைத் கான் ஆகியோரின் பந்து வீச்சு கடந்த ஆட்டத்தில் சிறப்பாக இருந்தது.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக ஆல்–ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகி விட்டதால் அவருக்கு பதிலாக அறிமுக வீரராக பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் அணியில் இடம் பெறுகிறார். இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் பில்லி ஸ்டான்லேக்குக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க நிலை பேட்ஸ்மேன்கள் இரண்டு போட்டியிலும் சிறப்பாக செயல்படவில்லை. அதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு அந்த அணிக்கு உள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்சில் ஒளிபரப்பு

பெர்த் மைதானத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுடன் 6 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி 4 முறையும், ஆஸ்திரேலிய அணி 2 தடவையும் வென்று இருக்கிறது. இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:–

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித் (கேப்டன்), பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், மேத்யூ வேட், ஜேம்ஸ் பவுல்க்னெர், கம்மின்ஸ், ஹேசில்வுட், பில்லி ஸ்டான்லெக்.

பாகிஸ்தான்: முகமது ஹபீஸ் (கேப்டன்), ‌ஷர்ஜீல்கான், பாபர் அசாம், ஆசாத் ‌ஷபிக், சோயிப் மாலிக், உமர் அக்மல், முகமது ரிஸ்வான், இம்ராத் வாசிம், முகமது அமிர், ஜூனைத்கான், ஹசன் அலி அல்லது வஹாப் ரியாஸ்.


Next Story