பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 19 Jan 2017 9:19 PM GMT (Updated: 19 Jan 2017 9:19 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பெர்த்,

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்.

3-வது ஒருநாள் போட்டி

பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்தியது. 40 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எட்டியிருந்ததை பார்த்த போது, எப்படியும் 300 ரன்களை கடக்கும் என்றே தோன்றியது. ஆனால் இறுதி கட்டத்தில் சிறப்பான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கினால் ஆஸ்திரேலிய அணி, கடைசி 10 ஓவர்களில் 50 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்து பாகிஸ்தான் அணியின் ரன் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டது.

ஸ்டீவன் சுமித் சதம்

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 84 ரன்னும், ஷர்ஜீல்கான் 50 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், டிராவிஸ் ஹெட் 2 விக்கெட்டும், பில்லி ஸ்டான்லேக், கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான உஸ்மான் கவாஜா 9 ரன்னிலும், டேவிட் வார்னர் 35 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தாலும், கேப்டன் ஸ்டீவன் சுமித், ஹேன்ட்ஸ்கோம்ப் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். அறிமுக வீரராக களம் கண்ட ஹேன்ட்ஸ்கோம்ப் 82 ரன்னில் ஆட்டம் இழந்தார். 8-வது சதம் அடித்த ஸ்டீவன் சுமித் தனது 79-வது இன்னிங்சில் 3 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை கடந்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணி 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்டீவன் சுமித் 104 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 108 ரன்னும், டிராவிஸ் ஹெட் 23 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி சிட்னியில் நாளை மறுதினம் நடக்கிறது.

Next Story