கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா இமாலய வெற்றி; தொடரையும் கைப்பற்றியது


கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா இமாலய வெற்றி; தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 1 Feb 2017 9:46 PM GMT (Updated: 1 Feb 2017 9:46 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் தனதாக்கியது.

பெங்களூரு,

சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடைசி 20 ஓவர் கிரிக்கெட்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டன. இந்திய அணியில் மனிஷ்பாண்டேவுக்கு பதிலாக புதுமுக வீரராக ரிஷாப் பான்ட் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் டாவ்சன் நீக்கப்பட்டு பிளங்கெட் இடம் பிடித்தார்.

தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி விராட் கோலியும், உள்ளூர் நாயகன் லோகேஷ் ராகுலும் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினர். 2-வது ஓவரில் விராட் கோலி (2 ரன், 4 பந்து) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார். பந்து அவரது காலில் பட்டு எழும்பி சற்று அருகில் விழுந்தது. அதற்குள் ஒரு ரன் எடுக்க பாதி தூரம் ஓடி விட்டார். ஆனால் ராகுல் வேண்டாம் என்று மறுத்தார். திரும்பி வருவதற்குள் கோலி ரன்-அவுட் செய்யப்பட்டார். ஐ.பி.எல். போட்டியில் இது கோலியின் சொந்த ஊர் மைதானம் என்பதால் மிகுந்த ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

காணாமல் போன பந்து

அடுத்து சுரேஷ் ரெய்னா நுழைந்தார். டைமல் மில்ஸ் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து தனது வாணவேடிக்கையை ஆரம்பித்தார். ஆடுகளத்தில் பந்து இரு விதமாக அதாவது திடீரென எழும்புவதும், தாழ்ந்து வருவதுமாக இருந்தது. ஆனால் பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்பட்டது. இதை நமது வீரர்கள் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர். ஜோர்டானின் ஒரே ஓவரில் ரெய்னா 2 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.

மறுமுனையில் ராகுல் அடித்த ஒரு இமாலய சிக்சர் ஸ்டேடியத்தை விட்டு வெளியே போய் விழுந்தது. அந்த சிக்சரின் தூரம் 98 மீட்டர் ஆகும். பந்து தொலைந்து போனதால் புதிய பந்து எடுக்கப்பட்டது. ஸ்கோர் 65 ரன்களை எட்டிய போது, ராகுல் (22 ரன், 18 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.

ரெய்னா-டோனி அரைசதம்

இதை தொடர்ந்து விக்கெட் கீப்பர் டோனி களம் புகுந்தார். ரெய்னாவும், டோனியும் கைகோர்த்து இங்கிலாந்தின் பந்து வீச்சை நொறுக்கியெடுத்தனர். முதல் 10 ஓவர்களில் 78 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணிக்கு அதன் பிறகு ஸ்கோர் ஜெட் வேகத்தில் பயணித்தது.

2010-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக 20 ஓவர் போட்டியில் அரைசதத்தை கடந்த ரெய்னா 63 ரன்களில்(45 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். மொத்தத்தில் ரெய்னாவுக்கு இது 4-வது அரைசதமாகும். இதன் பிறகு யுவராஜ்சிங் ஆட வந்தார்.

இன்னொரு புறம் ஆக்ரோஷமாக பேட்டை சுழட்டியடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த டோனி தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்து பிரமாதப்படுத்தினார்.

யுவராஜ்சிங் சிறிது நேரமே நின்றாலும், இங்கிலாந்தை உலுக்கிவிட்டார். கிறிஸ் ஜோர்டானின் திடீரென வேகத்தை குறைத்து (ஸ்லோ) பந்து வீசும் தந்திரம் இந்த ஆட்டத்தில் எடுபடவில்லை. அவரது ஒரே ஓவரில் யுவராஜ்சிங், 3 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விரட்ட, மைதானமே ரசிகர்களின் உற்சாக கரவொலியில் அதிர்ந்தது. 18-வது ஓவரான அந்த ஓவரில் மட்டும் இந்தியாவுக்கு 24 ரன்கள் கிட்டியது. யுவராஜ்சிங் தனது பங்குக்கு 27 ரன்கள் (10 பந்து) எடுத்தார்.

இந்தியா 202 ரன் குவிப்பு

கடைசி ஓவரில், டோனி 56 ரன்களில் (35 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் ஹர்திக் பாண்ட்யா அடித்த சிக்சர் இந்திய அணி 200 ரன்களை தொடுவதற்கு வித்திட்டது. பாண்ட்யா 11 ரன்களில் (4 பந்து) ரன்-அவுட் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. பெங்களூரு மைதானத்தில் ஒரு அணி 200 ரன்களை தாண்டியது இதுவே முதல் முறையாகும். கடைசி 5 ஓவர்களில் மட்டும் இந்திய வீரர்கள் 70 ரன்களை திரட்டினர். இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது.

8 ரன்னில் 8 விக்கெட்

அடுத்து 203 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டும், கேப்டன் மோர்கனும் சிறிது நேரம் மிரட்டினர். ரெய்னாவின் ஓவரில் மோர்கன் 3 சிக்சர்களை ஓடவிட்டார். ஒரு கட்டத்தில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 119 ரன்களுடன் (13.2 ஓவர்) நல்ல நிலையில் இருந்தது. அதன் பிறகு ஒரே ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இருவரையும் கபளகரம் செய்தார். மோர்கன் 40 ரன்களிலும் (21 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோ ரூட் 42 ரன்களிலும் (37 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேற்றப்பட்டார்.

தனது அடுத்த ஓவரில் சாஹல் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து முழுமையாக சரண் அடைந்தது. அந்த அணி 16.3 ஓவர்களில் 127 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து அணி 18 பந்துகள் இடைவெளியில் கடைசி 8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை தாரைவார்த்தது குறிப்பிடத்தக்கது. மாயாஜாலம் காட்டிய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடரை கைப்பற்றியது

75 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்த இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக முதலாவது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன. ரன் வித்தியாசத்தின் அடிப்படை யில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் 2-வது மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

ஏற்கனவே டெஸ்ட், ஒரு நாள் தொடர்களை பறிகொடுத்த இங்கிலாந்து அணி 20 ஓவரையும் இழந்து வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறது.

ஸ்கோர் போர்டு

இந்தியா

கோலி (ரன்-அவுட்) 2

லோகேஷ் ராகுல் (பி)

ஸ்டோக்ஸ் 22

ரெய்னா (சி) மோர்கன் (பி)

பிளங்கெட் 63

டோனி(சி)ரஷித்(பி)ஜோர்டான் 56

யுவராஜ்சிங் (சி) பட்லர் (பி)

மில்ஸ் 27

ரிஷாப் பான்ட் (நாட்-அவுட்) 6

ஹர்திக் பாண்ட்யா(ரன்-அவுட்) 11

எக்ஸ்டிரா 15

மொத்தம் (20 ஓவர்களில்

6 விக்கெட்டுக்கு) 202

விக்கெட் வீழ்ச்சி: 1-4, 2-65, 3-120, 4-177, 5-191, 6-202

பந்து வீச்சு விவரம்

டைமல் மில்ஸ் 4-0-32-1

ஜோர்டான் 4-0-56-1

பிளங்கெட் 2-0-22-1

பென் ஸ்டோக்ஸ் 4-0-32-1

மொயீன் அலி 4-0-30-0

அடில் ரஷித் 2-0-23-0

இங்கிலாந்து

ஜாசன் ராய் (சி) டோனி (பி)

மிஸ்ரா 32

பில்லிங்ஸ் (சி) ரெய்னா (பி)

சாஹல் 0

ஜோ ரூட் எல்.பி.டபிள்யூ (பி)

சாஹல் 42

மோர்கன்(சி)பான்ட்(பி)சாஹல் 40

ஜோஸ் பட்லர் (சி)கோலி(பி)பும்ரா 0

ஸ்டோக்ஸ் (சி) ரெய்னா

(பி) சாஹல் 6

மொயீன் அலி (சி) கோலி

(பி) சாஹல் 2

பிளங்கெட் (பி) பும்ரா 0

ஜோர்டான் (ஸ்டம்பிங்) டோனி

(பி) சாஹல் 0

அடில் ரஷித் (நாட்-அவுட்) 0

மில்ஸ் (சி) கோலி (பி) பும்ரா 0

எக்ஸ்டிரா 5

மொத்தம் (16.3 ஓவர்களில்

ஆல்-அவுட்) 127

விக்கெட் வீழ்ச்சி: 1-8, 2-55, 3-119, 4-119, 5-119, 6-123, 7-127, 8-127, 9-127

பந்து வீச்சு விவரம்

நெஹரா 3-1-24-0

சாஹல் 4-0-25-6

பும்ரா 2.3-0-14-3

அமித் மிஸ்ரா 4-0-23-1

ஹர்திக் பாண்ட்யா 2-0-17-0

ரெய்னா 1-0-22-0

முதல்முறையாக டோனி அரைசதம்

2006-ம் ஆண்டு முதல் சர்வதேச 20 ஓவர் போட்டியில் விளையாடி வரும் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனியால் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியவில்லையே என்று அடிக்கடி விமர்சனங்கள் எழுவது உண்டு. கேப்டன்ஷிப்பில் பல சாதனைகளை படைத்த அவருக்கு ஏனோ அரைசதம் மட்டும் எட்டாக்கனியாக இருந்து வந்தது. 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 48 ரன்கள் எடுத்ததே நீண்ட காலமாக அவரது அதிகபட்சமாக நீடித்தது. இந்த நிலையில் சமீபத்தில் கேப்டன் பதவியை துறந்தார். இப்போது அவரது அரைசத கனவும் நனவாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 4-வது வரிசையில் இறங்கி அட்டகாசப்படுத்திய டோனி 50 ரன்களை முதல்முறையாக கடந்தார். 35 வயதான டோனிக்கு இது 76-வது 20 ஓவர் சர்வதேச போட்டியாகும்.

சர்ச்சைக்குரிய முடிவு:  நடுவர் விலகல்

தொடரை தீர்மானிக்கும் வகையில் நடந்த இந்த ஆட்டத்தில் கள நடுவராக பணியாற்ற இருந்த இந்தியாவை சேர்ந்த ஷம்சுதீன் விலகிக் கொண்டார். நாக்பூரில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியின் போது இங்கிலாந்து முன்னணி வீரர் ஜோ ரூட்டுக்கு தவறான எல்.பி.டபிள்யூ. கொடுத்தார். அதாவது பேட்டில் பட்டு அதன் பிறகு காலுறையில் பட்ட பந்துக்கு விரலை உயர்த்தி விட்டார். அவரது செயல்பாட்டை இங்கிலாந்து கேப்டன் மோர்கன் வெளிப்படையாக கண்டித்தார். அவரால் தான் தங்களது அணி தோற்று விட்டதாகவும், இது குறித்து ஐ.சி.சி.யிடம் முறையிடுவேன் என்றும் கூறியிருந்தார். மேலும் இதே நாக்பூர் ஆட்டத்தில் விராட் கோலி 7 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது நல்ல எல்.பி.டபிள்யூ. வாய்ப்பை நிராகரித்ததும் விமர்சிக்கப்பட்டது. இந்த சர்ச்சை எதிரொலியாக கடைசி நேரத்தில் அவர் பின்வாங்கிக்கொண்டார். இதையடுத்து 3-வது 20 ஓவர் போட்டியில் அவருக்கு பதிலாக நிதின் மேனன், அனில் சவுத்ரியுடன் இணைந்து கள நடுவர் பணியை கவனித்தார். டி.வி. நடுவராக ஷம்சுதீன் அமர்த்தப்பட்டார்.

6 விக்கெட் வீழ்த்தி சாஹல் கலக்கல்

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இந்த ஆட்டத்தில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். 20 ஓவர் போட்டியில் இந்திய பந்து வீச்சாளரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். அது மட்டுமின்றி 20 ஓவர் போட்டி வரலாற்றில் ஒரே இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை அறுவடை செய்த 2-வது பவுலர் என்ற சாதனைக்கும் யுஸ்வேந்திர சாஹல் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு இலங்கையின் அஜந்தா மென்டிஸ் இரண்டு முறை 6 விக்கெட் (ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக) கைப்பற்றி இருக்கிறார். 26 வயதான யுஸ்வேந்திர சாஹல் அரியானாவைச் சேர்ந்தவர். அவரே ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

Next Story