ஆஸ்திரேலியா–இந்தியா ஏ அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி கிரிக்கெட் மும்பையில் இன்று தொடக்கம்


ஆஸ்திரேலியா–இந்தியா ஏ அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி கிரிக்கெட் மும்பையில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 16 Feb 2017 9:30 PM GMT (Updated: 16 Feb 2017 8:56 PM GMT)

ஆஸ்திரேலியா–இந்தியா ஏ அணிகள் இடையிலான மூன்று நாள் பயிற்சி ஆட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது.

மும்பை,

ஆஸ்திரேலியா–இந்தியா ஏ அணிகள் இடையிலான மூன்று நாள் பயிற்சி ஆட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது.

பயிற்சி கிரிக்கெட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 23–ந்தேதி மராட்டிய மாநிலம் புனேயில் தொடங்குகிறது.

அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான அந்த மூன்று நாள் பயிற்சி ஆட்டம் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இந்திய டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்த பயிற்சி ஆட்டத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் முயற்சிப்பார்கள். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் களத்தில் நீண்ட நேரம் நின்று ஆடுவதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். மேலும், நாதன் லயன், ஸ்டீவ் ஓ கீபே, ஆஷ்டன் அகர் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களின் திறனை பரிசோதித்துக் கொள்ளவும் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் முனைப்பு காட்டும்.

இந்திய ஏ அணி எப்படி?

இந்த பயிற்சி ஆட்டம் இந்திய ‘ஏ’ அணியின் கேப்டனும், ஆல்–ரவுண்டருமான ஹர்திக் பாண்ட்யாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வரும் ஹர்திக் பாண்ட்யா இந்த பயிற்சி ஆட்டத்தில் அசத்தும் பட்சத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் கும்பிளேவின் கவனத்தை ஈர்க்கலாம். அதன் மூலம் அவருக்கு ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகம் ஆகும் அதிர்ஷ்டம் கிட்டலாம்.

இதே போல் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் பிரியாங் பன்சால், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பான்ட், இ‌ஷன் கிஷான், பாபா இந்த்ராஜித் உள்ளிட்டோர் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாட ஆர்வமாக இருக்கிறார்கள்.

பாண்ட்யா பேட்டி

ஹர்திக் பாண்ட்யா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘திறமையை வெளிப்படுத்த எங்கள் எல்லோருக்கும் இந்த போட்டி நல்ல வாய்ப்பாக இருக்கும். குறிப்பாக இந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடி, டெஸ்ட் தொடரில் இடம் பெற எனக்கு இது ஒரு அருமையான சந்தர்ப்பமாகும். இதை நாங்கள் ஒரு பயிற்சி ஆட்டமாக நினைக்கமாட்டோம். தேர்வாளர்களிடம் அங்கீகாரம் கிடைப்பதற்குரிய வாய்ப்பாக கருதி விளையாடுவோம்.

நான் ஏற்கனவே ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிராக விளையாடி இருக்கிறேன். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட இருப்பது வியப்புக்குரிய அனுபவத்தை கொடுக்கும். ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படிப்பட்டவர்கள், எந்த அளவுக்கு ஆக்ரோ‌ஷமாக ஆடுவார்கள் என்பதை அனைவரும் அறிவர். அவர்களுடன் மோத வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் எனது ஆட்டத்திறனில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அதில் தொடர்ந்து கவனம் செலுத்த விரும்புகிறேன். கோலியும், கும்பிளேவும் என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவாக இருப்பது கூடுதல் உத்வேகம் அளிக்கிறது. அணியின் சக வீரர்களிடம் இருந்து நிறைய வி‌ஷயங்களை கற்று வருகிறேன்.’ என்றார்.

அணி விவரம்

இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:–

இந்தியா ஏ: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), அகில் ஹெர்வாத்கர், பிரியாங் கிரிட் பன்சால், ஸ்ரேயாஸ் அய்யர், அங்கித் பாவ்னே, ரிஷாப் பான்ட், இ‌ஷன் கிஷான், ‌ஷபாஸ் நதீம், கிருஷ்ணப்பா கவுதம், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, அசோக் திண்டா, முகமது சிராஜ், ராகுல் சிங், பாபா இந்த்ராஜித்

ஆஸ்திரேலியா: ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஆஷ்டன் அகர், ஜாக்சன் பேர்டு, பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், ஹேசில்வுட், கவாஜா, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஓ கீபே, மேத்யூ ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட்.

இந்த ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story