இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்: ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் சதம்


இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்: ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் சதம்
x
தினத்தந்தி 17 Feb 2017 9:30 PM GMT (Updated: 17 Feb 2017 9:08 PM GMT)

இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் சதம் அடித்து அசத்தினர்.

மும்பை,

இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் சதம் அடித்து அசத்தினர்.

பயிற்சி ஆட்டம்

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 23–ந்தேதி புனே நகரில் தொடங்குகிறது.

டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி ஆஸ்திரேலியா – இந்தியா ‘ஏ’ அணிகள் இடையிலான மூன்று நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. உஸ்மான் கவாஜா நீக்கப்பட்டு, ஷான் மார்சுக்கு முன்னிலை கொடுக்கப்பட்டது.

வார்னர் 25 ரன்

‘டாஸ்’ ஜெயித்த இந்திய ‘ஏ’ அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சை டேவிட் வார்னரும், மேத்யூ ரென்ஷாவும் தொடங்கினர். நிதானமாக ஆடிய இந்த ஜோடி அதிக நேரம் நிலைக்கவில்லை. வார்னர் 25 ரன்களிலும் (30 பந்து, 4 பவுண்டரி), ரென்ஷா 11 ரன்களிலும் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் இ‌ஷன் கிஷானிடம் சிக்கினார்கள்.

இதன் பின்னர் கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், ஷான் மார்சும் இணைந்தனர். அணியை சரிவில் இருந்து மீட்ட இவர்கள் நேர்த்தியாக விளையாடி ரன்களை திரட்டினர். இந்திய ஏ அணி, மூன்று சுழற்பந்து வீச்சாளர் உள்பட 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த அனுபவ ஜோடியை அசைக்க முடியவில்லை.

சுமித், மார்ஷ் சதம்

இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ‌ஷபாஸ் நதீமின் பந்து வீச்சில் ஒரு சிக்சரை பறக்க விட்ட ஸ்டீவன் சுமித் தனது 30–வது முதல்தர செஞ்சுரியை கடந்ததும், அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்குடன் தேனீர் இடைவெளிக்கு பிறகு ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆகி வெளியேறினார். ஸ்டீவன் சுமித் 107 ரன்கள் (161 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார்.

இதே போல் ஷான் மார்சும் (104 ரன், 173 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) சதம் அடித்ததும் ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆனார். இருவரும் ஆடிய விதம் நிச்சயம் அடுத்து வரும் இந்திய டெஸ்ட் தொடரை எதிர்கொள்வதற்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் தனது பங்குக்கு 45 ரன்கள் (70 பந்து, 3 பவுண்டரி) எடுத்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

ஆஸ்திரேலியா 5–327 ரன்

நேற்றைய ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் (16 ரன்), மேத்யூ வேட் (7 ரன்) களத்தில் இருக்கிறார்கள். இன்று 2–வது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு ஷான் மார்ஷ் கூறுகையில், ‘எந்த போட்டி என்றாலும் சரி, களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடும் போது, அது உதவிகரமாக இருக்கும். இதில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் பெறும் நம்பிக்கையை அடுத்து வரும் டெஸ்ட் தொடருக்கு எடுத்து செல்ல விரும்புகிறோம்’ என்றார்.

‘ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடினாலும் தொடரை இழப்பது உறுதி’– ஹர்பஜன்சிங்

,இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் 4 டெஸ்டுகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடினால், இந்திய அணி தொடரை 3–0 என்ற கணக்கில் கைப்பற்றும். அந்த அணி நன்றாக ஆடினால் தான் இந்த நிலைமை. இல்லாவிட்டால் இந்திய அணி 4–0 என்ற கணக்கில் முழுமையாக ஆஸ்திரேலியாவை நொறுக்கி விடும். இந்திய ஆடுகளங்களில் அவர்கள் சமாளிப்பது எளிதான காரியம் அல்ல. அதுவும் முதல் பந்தில் இருந்தே பந்து சுழன்று திரும்ப ஆரம்பித்து விட்டால், ஆஸ்திரேலிய வீரர்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. ஆஸ்திரேலிய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இங்கு வந்திருந்தாலும் சாதிக்கக்கூடிய அளவுக்கு தரம் வாய்ந்த பவுலர்களாக தெரியவில்லை. இங்குள்ள வித்தியாசமான சூழலில் பந்து வீசுவது கடினம்’ என்றார்.


Next Story