‘எனது கேப்டன்ஷிப் குறித்து மதிப்பிடுவதற்கு இது சரியான நேரம் அல்ல’ இந்திய கேப்டன் கோலி பேட்டி


‘எனது கேப்டன்ஷிப் குறித்து மதிப்பிடுவதற்கு இது சரியான நேரம் அல்ல’ இந்திய கேப்டன் கோலி பேட்டி
x
தினத்தந்தி 22 Feb 2017 11:45 PM GMT (Updated: 22 Feb 2017 6:58 PM GMT)

‘எனது கேப்டன்ஷிப் குறித்து மதிப்பிடுவதற்கு இது சரியான நேரம் அல்ல’ என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளனார்.

புனே,

கோலி பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டுக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

ஒவ்வொரு தொடர் முடிந்த பிறகும் என்னை பற்றி நான் மதிப்பீடு செய்வதில்லை. போட்டிகளை வெல்வதே எனது ஒரே குறிக்கோள். அணி எப்படி செயல்படுகிறது, வீரர்கள் எந்த அளவுக்கு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே தலைமைத்துவம் (கேப்டன்ஷிப்) கணிக்கப்படும். வீரர்களாகிய நாங்கள் முழு திறமைக்கு ஏற்ப ஆடவில்லை என்றால், ஒரு கேப்டனாக நான் அதிகமாக எதையும் செய்து விட முடியாது. அணி மென்மேலும் முதிர்ச்சி அடையும் போது, கேப்டனும் சிறந்தவராக தெரிய ஆரம்பிப்பார். அணி நன்றாக ஆடாத பட்சத்தில், கேப்டன்ஷிப் நமது கட்டுப்பாட்டை விட்டு கொஞ்சம் விலகுவது போல் தோன்றும்.

இன்னும் 5 முதல் 8 ஆண்டுகளுக்கு பிறகு எனது செயல்பாடு குறித்து என்னால் மதிப்பீடு செய்ய இயலும். அதுவும் நான் நீண்ட காலம் கேப்டனாக நீடித்தால் தான் அதை செய்ய முடியும். கேப்டன்ஷிப்பை மதிப்பிடுவதற்கு 18 முதல் 20 மாதங்கள் என்பது மிகவும் குறுகிய காலமாகும். நாங்கள் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட வேண்டி இருக்கிறது. எனவே கேப்டனாக எதை நான் நன்றாக செய்திருக்கிறேன்? எதனை செய்யவில்லை என்பதை இப்போதே கணிப்பது சரியாக இருக்காது என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

மெத்தனத்தை தடுக்கிறது

கேப்டன் பொறுப்பு எந்த ஒரு தருணத்திலும், குறிப்பாக பேட்டிங்கில் மெத்தனமாக இருக்க அனுமதிக்காது. இந்த வகையில் ஒரு கேப்டனாக என்னிடம் இருந்து மெத்தனப்போக்கு வெளியேறி விட்டதாக நினைக்கிறேன். கூடுதல் பொறுப்பு காரணமாக அதிக கவனமுடன் செயல்படுகிறேன்.

ஒவ்வொரு ஆட்டத்தையும், ஒவ்வொரு தொடரையும் நாங்கள் சவால்மிகுந்த தொடராகவே பார்க்கிறோம். நாங்கள் எதிர்த்து ஆடிய எல்லா அணிகளுமே தரமான அணிகள் தான். ஆஸ்திரேலியாவும் இதில் விதி விலக்கல்ல. ஆஸ்திரேலியாவுக்கு என்று வித்தியாசமான அணுகுமுறையுடன் எதிர்கொள்ளப்போவதில்லை. கடந்த காலங்களில் மற்ற அணிகளுடன் எப்படி ஆடினோமோ அதே பாணியையே இப்போதும் கடைபிடிப்போம்.

நம்பிக்கையோடு உள்ளோம்

ஆஸ்திரேலிய அணி எந்த மாதிரி விளையாடும்? அவர்களது லெவன் அணியில் யார்–யார் இருப்பார்கள்? என்பது பற்றி கவலைப்படவில்லை. முதலாவது டெஸ்டிலும், இந்த தொடரிலும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருக்கிறோம். இது தான் எங்களது பலம். எதிரணி பற்றி அதிகமாக சிந்திப்பதில்லை. ஒவ்வொரு வீரர்களும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அது தான் இங்கு முக்கியம்.

இவ்வாறு கோலி கூறினார்.


Next Story