விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தமிழக அணி ‘சாம்பியன்’ 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்காலை வீழ்த்தியது


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தமிழக அணி ‘சாம்பியன்’ 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்காலை வீழ்த்தியது
x
தினத்தந்தி 20 March 2017 11:45 PM GMT (Updated: 20 March 2017 7:21 PM GMT)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தமிழக அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்காலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

புதுடெல்லி,

தினேஷ் கார்த்திக் சதம்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு–மனோஜ்திவாரி தலைமையிலான பெங்கால் அணிகள் மோதின.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி, பெங்கால் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47.2 ஓவர்களில் 217 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. 49 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தமிழக அணி, தினேஷ் கார்த்திக்கின் (112 ரன்) சிறப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டு கவுரவமான ஸ்கோரை எட்டியது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். பெங்கால் அணி தரப்பில் முகமது ‌ஷமி 4 விக்கெட்டும், அசோக் திண்டா 3 விக்கெட்டும், கனிஷ்க் சேத் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

தமிழக அணி வெற்றி

பின்னர் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய பெங்கால் அணி, தமிழக வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 45.5 ஓவர்களில் பெங்கால் அணி 180 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழக அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அதிகபட்சமாக சுதிப் சட்டர்ஜி 58 ரன்னும், கேப்டன் மனோஜ்திவாரி 32 ரன்னும் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் அஸ்வின் கிறிஸ்ட், முகமது, ரஹில் ஷா தலா 2 விக்கெட்டும், விஜய் சங்கர், பாபா அபராஜித், சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். சதம் அடித்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

5–வது முறையாக சாம்பியன்

இந்த வெற்றியின் மூலம் தமிழக அணி 5–வது முறையாக விஜய் ஹசாரே கோப்பையை தனதாக்கியது. ஏற்கனவே 2002–03, 2004–05, 2008–09, 2009–10 ஆகிய ஆண்டுகளில் தமிழக அணி கோப்பையை வென்று இருந்தது.


Next Story