‘தர்மசாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும்’


‘தர்மசாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும்’
x
தினத்தந்தி 23 March 2017 11:15 PM GMT (Updated: 23 March 2017 7:28 PM GMT)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை தொடங்குகிறது.

 இயற்கை எழில் கொஞ்சும் தர்மசாலாவில் இதுவரை 3 ஒரு நாள் போட்டி மற்றும் எட்டு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இங்கு டெஸ்ட் கிரிக்கெட் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும்.

ஆடுகளத்தன்மை குறித்து அதன் பராமரிப்பாளர் சுனில் சவுகான் கூறுகையில், ‘பிட்ச் உள்ளிட்ட சூழல் வேகப்பந்து வீச்சுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால் உள்நாட்டு போட்டிகளில் ஆனது போல், வேகப்பந்து வீச்சுக்கு மித மிஞ்சிய அளவுக்கு ஒத்துழைக்கும் என்று சொல்ல முடியாது. ஓரளவு தான் ஸ்விங் ஆகும். கடைசி நாள் வரை ஆட்டம் நீடிக்கும் வகையில், உண்மையான ஆடுகளத்தை தயாரிப்பதில் அக்கறை காட்டியுள்ளோம். முதல் இரு நாட்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவதை பார்ப்பீர்கள். கடைசி இரு நாட்களில் சுழற்பந்து வீச்சு எடுபடும். இந்த ஆடுகளத்திற்கு என்று தனி பாரம்பரியம் உண்டு. அதை மனதில் வைத்தே எப்போதும் இங்குள்ள ஆடுகளம் தயாரிக்கப்படுகிறது.’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘ஆடுகள தயாரிப்பு விஷயத்தில் இந்திய அணி நிர்வாகம் உள்ளிட்ட யாரிடம் இருந்தும் எந்தவித அறிவுறுத்தலும் எனக்கு வரவில்லை’ என்றார்.

‘ பொதுவாகவே இங்கு முடிவு கிடைக்கும் வகையிலான ஆடுகளத்தை வழங்கவே நாங்கள் முயற்சிப்போம். இந்த சீசனுக்கான ரஞ்சி போட்டியின் போது கூட 4-வது நாளில் உணவு இடைவேளைக்கு பிறகு முடிவு கிடைத்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஈஸ்வர் பாண்டே, அசோக் திண்டா ஆகியோர் தங்களது ரஞ்சி ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் கணிசமான விக்கெட்டுகளை சாய்ப்பார்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story