இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 300 ரன்னில் ஆல்–அவுட் புதுமுக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அபாரம்


இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 300 ரன்னில் ஆல்–அவுட் புதுமுக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அபாரம்
x
தினத்தந்தி 26 March 2017 12:15 AM GMT (Updated: 25 March 2017 7:27 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 300 ரன்னில் ஆல்–அவுட் ஆனது.

தர்மசாலா,

அறிமுக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார்.

கோலி இல்லை

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நேற்று தொடங்கியது. இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் டெஸ்டாக இது அமைந்திருப்பால் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

இந்திய அணியில் தோள்பட்டை காயத்தில் இருந்து மீளாத கேப்டன் விராட் கோலி இந்த டெஸ்டில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றார். கோலியின் இடத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் இடம் பெறுவார் என்று நினைத்தவேளையில் யாரும் எதிர்பாராத விதமாக ‘சைனாமேன்’ வகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். இதே போல் இஷாந்த் ‌ஷர்மா கழற்றி விடப்பட்டு அவருக்கு பதிலாக ‘ஸ்விங்’ செய்வதில் வல்லவரான புவனேஷ்வர்குமாருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இல்லை.

கண்டம் தப்பிய வார்னர்

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி டேவிட் வார்னரும், மேத்யூ ரென்ஷாவும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். புவனேஷ்வர்குமார் வீசிய முதல் பந்திலேயே வார்னர் வெளியேறி இருக்க வேண்டியது. ‘ஸ்விங்’ ஆன பந்து அவரது பேட்டில் உரசிக்கொண்டு ‘ஸ்லிப்’ பகுதிக்கு எகிறியது. 3–வது ஸ்லிப்பில் நின்ற கருண் நாயர் பாய்ந்து விழுந்த போதிலும் பந்து கையில் பட்டு நழுவியதுடன் பவுண்டரிக்கும் ஓடியது. கண்டத்தில் இருந்து தப்பித்த வார்னர் அதே ஓவரில் மேலும் ஒரு பவுண்டரி அடிக்க புவனேஷ்வர்குமார் ஏமாற்றத்திக்குள்ளானார். உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் ரென்ஷா (1 ரன், 6 பந்து) வீழ்ந்தார். பந்து அவரது தொடையில் பட்டு ஸ்டம்பையும் பதம் பார்த்தது.

இதன் பின்னர் கேப்டன் ஸ்டீவன் சுமித் அடியெடுத்து வைத்தார். களத்தில், பவுன்சுடன் வேகப்பந்து வீச்சு ஓரளவு எடுபட்ட போதிலும் சுமித்தும், வார்னரும் சிரமமின்றி ரன்களை சேகரித்து ஆதிக்கம் செலுத்தினர். ஒரு நாள் போட்டி போன்று அதிரடியாக ஆடிய இவர்கள் மளமளவென ரன்களை குவித்தனர். முதல் 10 ஓவர்களில் 52 ரன்களை திரட்டிய ஆஸ்திரேலியா உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. நடப்பு தொடரில் முதல் முறையாக வார்னர் அரைசதத்தை கடந்தார்.

‘செக்’ வைத்த குல்தீப்

வலுவான அடித்தளம் அமைத்த இந்த ஜோடிக்கு புதுமுக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முடிவு கட்டினார். ஸ்கோர் 144 ரன்களை எட்டிய போது வார்னர் (56 ரன், 87 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) குல்தீப் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஷான் மார்சை (4 ரன்) உமேஷ் யாதவ் நீடிக்க விடவில்லை.

அவரைத் தொடர்ந்து இறங்கிய முந்தைய டெஸ்டின் கதாநாயகன் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் (8 ரன்) குல்தீவ் யாதவின் சுழலில் சிக்கினார். பந்து ‘பிட்ச்’ ஆனதும் சுழன்று திரும்பி ஸ்டம்பை தாக்கியது. அடுத்து வந்த மேக்ஸ்வெல்லும் (8 ரன்) குல்தீவ் யாதவின் பந்து வீச்சை கணிக்க முடியாமல் கிளீன் போல்டு ஆகிப்போனார்.

அதிக பிரபலமில்லாத வீரர் என்பதால் குல்தீப் யாதவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். அதனால் தான் என்னவோ அவரை ‘துருப்பு சீட்டு’ போல் இந்தியா கடைசி நேரத்தில் பயன்படுத்திக் கொண்டது.

குல்தீவ் யாதவ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கபளீகரம் செய்ததால் ஆஸ்திரேலியா மிடில்வரிசையில் (5–178 ரன்) நிலைகுலைந்தது. ஆனால் மறுமுனையில் கேப்டன் ஸ்டீவன் சுமித்தை மட்டும் அவ்வளவு எளிதில் அசைக்க முடியவில்லை.

சுமித் சதம்

பேட்டிங்கில் சாதுர்யத்தை காட்டிய சுமித் பவுண்டரி அடித்து தனது 20–வது சதத்தை நிறைவு செய்தார். இந்த தொடரில் அவர் ருசித்த 3–வது சதமாகும்.

இந்திய பவுலர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்த சுமித்தை (111 ரன், 173 பந்து, 14 பவுண்டரி) ஒரு வழியாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காலி செய்தார். அவரது பந்தில் ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் ஆனார். இதன் பின்னர் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் தாக்குப்பிடித்து விளையாட இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் துரிதமாக விழுந்தன. மேத்யூ வேட் 57 ரன்களில் (125 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜடேஜாவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார்.

ஆஸ்திரேலியா 300 ரன்

ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 144 ரன்களுடன் திடமான நிலையில் காணப்பட்ட ஆஸ்திரேலியா, மேற்கொண்டு 156 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய 9 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஒரே நாளில் அடங்கிப்போனது ஆச்சரியமே. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 88.3 ஓவர்களில் 300 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து இந்திய அணி ஒரு ஓவர் மட்டும் விளையாட வேண்டி இருந்தது. அந்த ஒரு ஓவரில் இந்திய அணி ரன் எதுவும் எடுக்கவில்லை. 2–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

ஸ்கோர் போர்டு - முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா

வார்னர் (சி) ரஹானே (பி) குல்தீப் 56

ரென்ஷா (பி) உமேஷ் 1

ஸ்டீவன் சுமித் (சி) ரஹானே (பி) அஸ்வின் 111

ஷான் மார்ஷ் (சி) சஹா (பி) உமேஷ் 4

ஹேன்ட்ஸ்கோம்ப் (பி) குல்தீப் 8

மேக்ஸ்வெல் (பி) குல்தீப் 8

மேத்யூ வேட் (பி) ஜடேஜா 57

கம்மின்ஸ் (சி) அண்ட் (பி) குல்தீப் 21

ஸ்டீவ் ஓ கீபே (ரன்–அவுட்) 8

நாதன் லயன் (சி) புஜாரா (பி) புவனேஷ்வர் 13

ஹேசில்வுட் (நாட்–அவுட்) 2

எக்ஸ்டிரா 11

மொத்தம் (88.3 ஓவர்களில் ஆல்–அவுட்) 300

விக்கெட் வீழ்ச்சி: 1–10, 2–144, 3–153, 4–168, 5–178, 6–208, 7–245, 8–269, 9–298

பந்து வீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார் 12.3–2–41–1

உமேஷ் யாதவ் 15–1–69–2

அஸ்வின் 23–5–54–1

ஜடேஜா 15–1–57–1

குல்தீப் யாதவ் 23–3–68–4

இந்தியா

லோகேஷ் ராகுல் (நாட்–அவுட்) 0

விஜய் (நாட்–அவுட்) 0

எக்ஸ்டிரா 0

மொத்தம் (ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி) 0

பந்து வீச்சு விவரம்

ஹேசில்வுட் 1–1–0–0

--–

எல்லாமே அறிமுகம்

இந்த டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்தியாவின் 288–வது டெஸ்ட் வீரராக அறிமுகம் ஆனார். சர்தேச டெஸ்ட் அரங்கில் ரஹானே கேப்டனாக செயல்படுவது இதுவே முதல் முறையாகும். அவர் இந்தியாவின் 33–வது டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை பெற்றார். எழில்கொஞ்சும் பின்னணியில் அமைந்துள்ள தர்மசாலா மைதானத்தில் டெஸ்ட் போட்டி அரங்கேறியது இதுவே முதல் முறையாகும். இந்தியாவின் 27–வது டெஸ்ட் மைதானமாக அங்கீகாரம் கிடைத்துள்ளது.

--–

வெளியில் இருந்தாலும் அணிக்கு ஆலோசனை வழங்கிய கோலி

இந்திய கேப்டன் விராட் கோலி 3–வது டெஸ்டின் போது, பீல்டிங் செய்கையில் வலது தோள்பட்டையில் காயமடைந்தார். உடல்தகுதி சோதனையில் தேறாததால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் விளையாட முடியவில்லை. பெவிலியனில் இருந்து ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த விராட் கோலி ஆர்வமிகுதியால் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொண்டு மைதானத்திற்குள் வந்ததுடன், பொறுப்பு கேப்டன் ரஹானே மற்றும் சக வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதே போல் எல்லைக்கோடு அருகில் குல்தீப் யாதவ் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, அவருக்கும் ‘டிப்ஸ்’ கொடுத்தார்.

--–

ஸ்டெயின் சாதனையை முறியடித்தார், அஸ்வின்

இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், தர்மசாலா டெஸ்டில் ஒரு விக்கெட் எடுத்தார். இதன் மூலம் இந்த சீசனில் (2016–17) அவரது டெஸ்ட் விக்கெட் எண்ணிக்கை 79 ஆக (13 டெஸ்ட்) உயர்ந்தது. இதையடுத்து ஒரு சீசனில் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் 2007–08–ம் ஆண்டு சீசனில் 78 விக்கெட் (12) எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.


Next Story