ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெற்றி பாதையில் இந்திய அணி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்:  வெற்றி பாதையில் இந்திய அணி
x
தினத்தந்தி 27 March 2017 11:45 PM GMT (Updated: 27 March 2017 7:08 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பாதையில் பயணிக்கிறது. வெற்றிக்கு இன்னும் 87 ரன்களே தேவைப்படுகிறது.

தர்மசாலா,

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையே தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாச்சலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடந்து வருகிறது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 300 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் சுமித் 111 ரன்கள் எடுத்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தது. 2–வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 91 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து இருந்தது. விருத்திமான் சஹா 10 ரன்னுடனும், ரவீந்திர ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ரவீந்திர ஜடேஜா 63 ரன்கள்

நேற்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. விருத்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். விருத்திமான் சஹா நிதானமாக விளையாட, ரவீந்திர ஜடேஜா அடித்து ஆடினார். கம்மின்ஸ் வீசிய முதல் பந்திலேயே ரவீந்திர ஜடேஜா, விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் கேட்ச் ஆனார். பேட், பேடில் பட்டதால் எழுந்த சத்தத்தை தவறாக கணித்த நடுவர் ‘அவுட்’ என்று அறிவித்தார். ஆனால் டி.ஆர்.எஸ். அப்பீலில் அவுட் இல்லை என்பது தெளிவானதால் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து அபாரமாக ஆடி அணியை முன்னிலை பெற வைத்தார்.

நிலைத்து நின்று ஆடிய ரவீந்திர ஜடேஜா 83 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் அரை சதத்தை கடந்தார். 30–வது டெஸ்டில் ஆடும் அவர் அடித்த 7–வது அரை சதம் இதுவாகும். அணியின் ஸ்கோர் 317 ரன்னாக உயர்ந்த போது ரவீந்திர ஜடேஜா (63 ரன்கள், 95 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன்) கம்மின்ஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார். 7–வது விக்கெட்டுக்கு விருத்திமான் சஹா–ரவீந்திர ஜடேஜா ஜோடி 96 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலியா 332 ரன்கள்

அடுத்து களம் கண்ட புவனேஷ்வர்குமார் ரன் எதுவும் எடுக்காமலும், விருத்திமான் சஹா 31 ரன்னிலும் (102 பந்துகளில் 2 பவுண்டரியுடன்), குல்தீப் யாதவ் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 118.1 ஓவர்களில் 332 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. உமேஷ்யாதவ் 2 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 32 ரன்கள் முன்னிலை பெற்றது போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், ஸ்டீவ் ஓ கீபே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

விக்கெட்டுகள் சரிவு

32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரென்ஷா, டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஆடுகளத்தின் தன்மை காரணமாக பந்து நன்றாக பவுன்ஸ் ஆனதுடன், அதிகமாக சுழலவும் செய்தது. இதனை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் திணறியதுடன், விக்கெட்டையும் வேகமாக பறிகொடுத்தனர்.

டேவிட் வார்னர் 6 ரன்னிலும், முதல் இன்னிங்சில் சதம் அடித்த கேப்டன் ஸ்டீவன் சுமித் 17 ரன்னிலும், ரென்ஷா 8 ரன்னிலும், ஹேன்ட்ஸ்கோம்ப் 18 ரன்னிலும், ஷான் மார்ஷ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

106 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் 53.5 ஓவர்களில் 137 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 60 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ்யாதவ் 3 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதனை அடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் 13 ரன்னுடனும் (18 பந்துகளில் 3 பவுண்டரியுடன்), விஜய் 6 ரன்னுடனும் (18 பந்துகளில்) களத்தில் உள்ளனர்.

வெற்றி பாதையில் இந்தியா

இன்று (செவ்வாய்க்கிழமை) 4–வது நாள் ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 87 ரன்களே தேவைப்படுகிறது. இதனால் இந்திய அணி வெற்றிப் பாதையில் பயணிக்கிறது. இந்திய அணி கைவசம் 10 விக்கெட்டுகள் இருப்பதால் வெற்றி உறுதி எனலாம்.

ஸ்கோர் போர்டு முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா 300 ரன் இந்தியா

லோகேஷ் ராகுல் (சி) வார்னர் (பி) கம்மின்ஸ் 60

விஜய் (சி) வேட் (பி) ஹேசில்வுட் 11

புஜாரா (சி) ஹேன்ட்ஸ்கோம்ப் (பி) லயன் 57

ரஹானே (சி) சுமித் (பி) லயன் 46

கருண் நாயர் (சி) வேட் (பி) லயன் 5

அஸ்வின் எல்.பி.டபிள்யூ (பி) லயன் 30

விருத்திமான் சஹா (சி) ஸ்டீவன் சுமித் (பி) கம்மின்ஸ் 31

ரவீந்திர ஜடேஜா (பி) கம்மின்ஸ் 63

புவனேஷ்வர்குமார் (சி) ஸ்டீவன் சுமித் (பி) ஸ்டீவ் ஓ கீபே 0

குல்தீப் யாதவ் (சி) ஹேசில்வுட் (பி) லயன் 7

உமேஷ்யாதவ் (நாட்–அவுட்) 2

எக்ஸ்டிரா 20

மொத்தம் (118.1 ஓவர்களில் ஆல்–அவுட்) 332

விக்கெட் வீழ்ச்சி: 1–21, 2–108, 3–157, 4–167, 5–216, 6–221, 7–317, 8–318, 9–318.

பந்து வீச்சு விவரம்

ஹேசில்வுட் 25–8–51–1

கம்மின்ஸ் 30–8–94–3

நாதன் லயன் 34.1–5–92–5

ஸ்டீவ் ஓ கீபே 27–4–75–1

மேக்ஸ்வெல் 2–0–5–0

2–வது இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா

ரென்ஷா (சி) விருத்திமான் சஹா (பி) உமேஷ்யாதவ் 8

டேவிட் வார்னர் (சி) விருத்திமான் சஹா (பி) உமேஷ்யாதவ் 6

ஸ்டீவன் சுமித் (பி) புவனேஷ்வர்குமார் 17

ஹேன்ட்ஸ்கோம்ப் (சி) ரஹானே (பி) அஸ்வின் 18

மேக்ஸ்வெல் எல்.பி.டபிள்யூ (பி) அஸ்வின் 45

ஷான் மார்ஷ் (சி) புஜாரா (பி) ரவீந்திர ஜடேஜா 1

மேத்யூ வேட் (நாட்–அவுட்) 25

கம்மின்ஸ் (சி) ரஹானே (பி) ரவீந்திர ஜடேஜா 12

ஸ்டீவ் ஓ கீபே (சி) புஜாரா (பி) ரவீந்திர ஜடேஜா 0

லயன் (சி) விஜய் (பி) உமேஷ்யாதவ் 0

ஹேசில்வுட் எல்.பி.டபிள்யூ. (பி) அஸ்வின் 0

எக்ஸ்டிரா 5

மொத்தம் (53.5 ஓவர்களில் ஆல்–அவுட்) 137

விக்கெட் வீழ்ச்சி: 1–10, 2–31, 3–31, 4–87, 5–92, 6–106, 7–121, 8–121, 9–122.

பந்து வீச்சு விவரம்:

புவனேஷ்வர்குமார் 7–1–27–1

உமேஷ்யாதவ் 10–3–29–3

குல்தீப் யாதவ் 5–0–23–0

ரவீந்திர ஜடேஜா 18–7–24–3

அஸ்வின் 13.5–4–29–3

இந்தியா

லோகேஷ் ராகுல் (நாட்–அவுட்) 13

விஜய் (நாட்–அவுட்) 6

எக்ஸ்டிரா 0

மொத்தம் (6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி) 19

பந்து வீச்சு விவரம்:

கம்மின்ஸ் 3–1–14–0

ஹேசில்வுட் 2–0–5–0

ஸ்டீவ் ஓ கீபே 1–1–0–0


Next Story