கும்பிளே விவகாரத்தில் கோலியை விமர்சிப்பது தேவையற்றது கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் சொல்கிறார்


கும்பிளே விவகாரத்தில் கோலியை விமர்சிப்பது தேவையற்றது கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் சொல்கிறார்
x
தினத்தந்தி 25 Jun 2017 8:11 PM GMT (Updated: 25 Jun 2017 8:10 PM GMT)

‘இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்பிளே விலகியதற்கு, காரணமில்லாமல் கேப்டன் விராட் கோலியை விமர்சிக்கிறார்கள்.

ஹமிர்பூர்,

இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

‘இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்பிளே விலகியதற்கு, காரணமில்லாமல் கேப்டன் விராட் கோலியை விமர்சிக்கிறார்கள். இந்த விவாதங்கள் முடிவுக்கு வர வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரரை குறி வைத்து விமர்சன கணைகள் தொடுக்கப்படுவது இது ஒன்றும் முதல்முறையல்ல. கடந்த காலங்களிலும் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. தற்போது கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் யாரும் கிடையாது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டை அவர் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வார். அத்தகைய திறமை அவரிடம் இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முந்தைய நிர்வாகம் இத்தகைய விவகாரங்களை திறம்பட கையாளும். ஏதாவது பிரச்சினை எழுந்தால் மாற்றம் கொண்டு வருவதற்கு வசதியாக, கும்பிளேவுக்கு ஓராண்டு காலம் மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அப்போது ஒப்பந்த காலம் குறித்து யாரும் ஆட்சேபிக்கவில்லை. மேலும், கும்பிளேவின் ஒப்பந்தத்தில் 7–8 மாதங்கள் வரை நாங்கள் பொறுப்பில் இருந்தோம். அந்த சமயத்தில் எந்த பிரச்சினையும் எழவில்லை. எனவே இத்தகைய சர்ச்சைகள் எப்படி கிளம்பியது என்பது குறித்து இப்போது கிரிக்கெட் வாரியத்தை நடத்தி வருபவர்களிடம் தான் கேள்வி கேட்க வேண்டும்’ என்றார்.


Next Story