அடுத்த 5 ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் பிரதான ஸ்பான்சர் ரூ.2,199 கோடிக்கு ஒப்பந்தம்


அடுத்த 5 ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் பிரதான ஸ்பான்சர் ரூ.2,199 கோடிக்கு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 27 Jun 2017 11:00 PM GMT (Updated: 27 Jun 2017 8:44 PM GMT)

அடுத்த 5 ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடருக்கான பிரதான ஸ்பான்சராக விவோ நிறுவனம் ரூ.2,199 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

புதுடெல்லி,

2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் இடையிலான இந்த போட்டியில் இந்திய வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் இணைந்து ஆடுவதால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த போட்டிக்கான பிரதான (டைட்டில்) ஸ்பான்சர் ஷிப் உரிமத்தை கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுக்கு விவோ ஸ்மார்ட் போன் நிறுவனம் பெற்று இருந்தது. அதாவது ஆண்டுக்கு ரூ.100 கோடியை ஸ்பான்சராக வழங்கியது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2018) முதல் 2022-ம் ஆண்டு வரையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடருக்கு பிரதான ஸ்பான்சர் தேடும் பணியில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டது. இதற்காக டெண்டர்கள் கடந்த மாதத்தில் வரவேற்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெற சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களான விவோ, ஓப்போ இடையே கடும் போட்டி நிலவியது.

ஐ.பி.எல். போட்டி தொடருக்கான ஸ்பான்சர் உரிமம் யாருக்கு? என்பதை முடிவு செய்ய இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று டெண்டர்கள் பிரிக்கப்பட்டன. இதில் அடுத்த 5 ஆண்டுக்கு ரூ.2,199 கோடி வழங்குவதாக தெரிவித்து இருந்த விவோ நிறுவனம் ஸ்பான்சர் உரிமத்தை பெற்றுள்ளது. அதாவது அந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.440 கோடியை ஸ்பான்சராக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு செலுத்தும். ஓப்போ நிறுவனம் ரூ.1,430 கோடிக்கு விண்ணப்பித்து இருந்ததால் உரிமம் பெற முடியாமல் ஏமாற்றம் கண்டது. புதிய ஒப்பந்த தொகை முந்தைய ஒப்பந்தத்தை விட 554 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சஸ்பெண்டு காலம் முடிவதால் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கு மீண்டும் திரும்புகின்றன. அத்துடன் அணிக்கான வீரர்கள் மாற்றம் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இதனால் ஸ்பான்சர் ஒப்பந்த தொகை தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. 

Next Story