டாப்–10 இடத்தில் 4 இந்திய வீரர்களுக்கு இடம்: டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் லோகேஷ் ராகுல் 9–வது இடத்துக்கு முன்னேற்றம்


டாப்–10 இடத்தில் 4 இந்திய வீரர்களுக்கு இடம்:  டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் லோகேஷ் ராகுல் 9–வது இடத்துக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 15 Aug 2017 10:45 PM GMT (Updated: 15 Aug 2017 8:22 PM GMT)

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் லோகேஷ் ராகுல் 9–வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

துபாய்,

டாப்–10 இடத்தை 4 இந்தியர்கள் அலங்கரிக்கிறார்கள்.

பல்லகெலேயில் நடந்த இலங்கைக்கு எதிரான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்று தொடரை 3–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3–வது நாளுக்குள் இலங்கையை சுருட்டி வீசிய இந்திய அணி, வெளிநாட்டு மண்ணில் முதல் முறையாக 3 மற்றும் அதற்கு மேற்பட்ட தொடரில் எதிரணியை முழுமையாக வென்று (ஒயிட்வாஷ்) வரலாறு படைத்தது.

இந்த டெஸ்டில் வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்தியாவின் ஆதிக்கத்தை பார்க்க முடிகிறது. டாப்–10 இடத்திற்குள் மட்டும் 4 இந்தியர்கள் அங்கம் வகிக்கிறார்கள்.

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் 85 ரன்கள் விளாசியதுடன் தொடர்ச்சியாக 7 இன்னிங்சில் அரைசதம் எடுத்த சாதனையாளர் பட்டியலில் இணைந்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 2 இடங்கள் முன்னேறி 9–வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் 25 வயதான லோகேஷ் ராகுல் தனது முந்தைய சிறந்த தரநிலையை சமன் செய்துள்ளார். இந்த டெஸ்டில் ஒற்றை இலக்கில் வெளியேறிய இந்திய வீரர் புஜாரா ஒரு இடம் இறங்கி 4–வது இடம் பெற்றுள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி மாற்றமின்றி 5–வது இடத்தில் நீடிக்கிறார்.

பல்லகெலே போட்டியில் 17 ரன்னில் ஆட்டம் இழந்த இன்னொரு இந்திய வீரர் அஜிங்யா ரஹானே 6–வது இடத்தில் இருந்து 10–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே நேரத்தில், 119 ரன்கள் குவித்ததுடன் இலங்கை தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் 10 இடங்கள் ஏற்றம் கண்டு 28–வது இடத்தை பிடித்துள்ளார். தனது ‘கன்னி’ சதத்தை 86 பந்துகளில் எட்டி அசத்திய இந்திய ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 45 இடங்கள் கிடுகிடுவென எகிறி 68–வது இடம் வகிக்கிறார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் டாப்–10 இடத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 3–வது இடத்திலும் தொடருகிறார்கள்.

இந்திய பவுலர்கள் முகமது ‌ஷமி 19–வது இடத்திலும் (ஒரு இடம் உயர்வு), உமேஷ் யாதவ் 21–வது இடத்திலும் (ஒரு இடம் ஏற்றம்), குல்தீப் யாதவ் 58–வது இடத்திலும் (29 இடம் முன்னேற்றம்) இருக்கிறார்கள்.

அதே சமயம் தடை நடவடிக்கையால் இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆட முடியாமல் போன ரவீந்திர ஜடேஜா ஆல்–ரவுண்டரின் தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளார்.

வங்காளதேச வீரர் ‌ஷகிப் அல்–ஹசன் (431 புள்ளி) மீண்டும் ஆல்–ரவுண்டர்களின் முதலிட அரியணையில் அமர்ந்துள்ளார். ஜடேஜா 430 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், அஸ்வின் 422 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும், இங்கிலாந்தின் மொயீன் அலி 4–வது இடத்திலும் (409 புள்ளி), பென் ஸடோக்ஸ் 5–வது இடத்திலும் (360 புள்ளி) உள்ளனர்.

இலங்கையுடனான டெஸ்ட் தொடரை வசப்படுத்தியதன் மூலம் கூடுதலாக 2 புள்ளி சேர்த்துள்ள இந்திய அணி மொத்தம் 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் கம்பீரமாக நீடிக்கிறது. ஒரு புள்ளியை இழந்த இலங்கை 90 புள்ளிகளுடன் 7–வது இடத்தில் இருக்கிறது.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1–3 கணக்கில் இழந்த தென்ஆப்பிரிக்க அணி 7 புள்ளிகளை பறிகொடுத்து, 110 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ளது.

இந்தியாவுக்கும், தென்ஆப்பிரிக்காவுக்கும் இடையே 15 புள்ளிகள் வித்தியாசம் இருக்கிறது. அதனால் இப்போதைக்கு இந்தியாவின் டெஸ்ட் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து இல்லை.

டாப்–10 பேட்ஸ்மேன்கள்

வரிசை வீரர் நாடு புள்ளி

1 ஸ்டீவன் சுமித் ஆஸ்திரேலியா 941

2 ஜோ ரூட் இங்கிலாந்து 891

3 வில்லியம்சன் நியூசிலாந்து 880

4 புஜாரா இந்தியா 876

5 விராட் கோலி இந்தியா 806

6 ஜானி பேர்ஸ்டோ இங்கிலாந்து 772

7 அசார் அலி பாகிஸ்தான் 769

8 அம்லா தென்ஆப்பிரிக்கா 764

9 லோகேஷ் ராகுல் இந்தியா 761

10 ரஹானே இந்தியா 760

டாப்–10 பந்து வீச்சாளர்கள்

1 ரவீந்திர ஜடேஜா இந்தியா 884

2 ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து 860

3 அஸ்வின் இந்தியா 852

4 ஹேசில்வுட் ஆஸ்திரேலியா 826

5 ஹெராத் இலங்கை 809

6 ரபடா தென்ஆப்பிரிக்கா 785

7 ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து 775

8 ஸ்டெயின் தென்ஆப்பிரிக்கா 763

9 பிலாண்டர் தென்ஆப்பிரிக்கா 751

10 நீல் வாக்னெர் நியூசிலாந்து 745

அணிகளின் தரவரிசை

வரிசை அணி புள்ளி

1 இந்தியா 125

2 தென்ஆப்பிரிக்கா 110

3 இங்கிலாந்து 105

4 ஆஸ்திரேலியா 100

5 நியூசிலாந்து 97

6 பாகிஸ்தான் 93

7 இலங்கை 90

8 வெஸ்ட் இண்டீஸ் 75

9 வங்காளதேசம் 69

10 ஜிம்பாப்வே 00


Next Story