சாம்பியன் கோப்பையை வெல்லப்போவது யார்? சேப்பாக் சூப்பர் கில்லீஸ்– தூத்துக்குடி அணிகள் இன்று பலப்பரீட்சை


சாம்பியன் கோப்பையை வெல்லப்போவது யார்?  சேப்பாக் சூப்பர் கில்லீஸ்– தூத்துக்குடி அணிகள் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 19 Aug 2017 10:30 PM GMT (Updated: 19 Aug 2017 9:44 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தூத்துக்குடி பேட்ரியாட்சை இன்று எதிர்கொள்கிறது.

சென்னை,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தூத்துக்குடி பேட்ரியாட்சை இன்று எதிர்கொள்கிறது.

டி.என்.பி.எல். இறுதி ஆட்டம்

2–வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 22–ந்தேதி தொடங்கியது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் 8 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் பிளே–ஆப் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சும், சேப்பாக் சூப்பர் கில்லீசும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், தூத்துக்குடி பேட்ரியாட்சும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சையில் இறங்குகின்றன. கடந்த ஆண்டும் இறுதி சுற்றில் இவ்விரு அணிகள் தான் சந்தித்தன. அதில் தூத்துக்குடி வாகை சூடியது. இந்த சீசனில் முடிவு எந்த மாதிரி அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கலக்கும் வாஷிங்டன்

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் தான். லீக் சுற்றில் 7 ஆட்டங்களிலும் வெற்றிகளை அள்ளிய அந்த அணி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீசை சாய்த்து இறுதிப்போட்டியை எட்டியது.

தூத்துக்குடி அணியின் ஆணிவேர் வாஷிங்டன் சுந்தர் தான். பேட்டிங்கில் ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 445 ரன்கள் குவித்து முதலிடம் வகிக்கும் அவர் சுழற்பந்து வீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். தனது பங்குக்கு 14 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அவருடன் சேர்த்து கேப்டன் தினேஷ் கார்த்திக், கவுசிக் காந்தி, அபினவ் முகுந்த், வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன், சுழற்பந்து வீச்சாளர் கணேஷ் மூர்த்தி உள்ளிட்டோர் தூத்துக்குடி அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள். பலமான அணியாக திகழும் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், வெற்றிப்பயணத்தை நீட்டிப்பதில் வரிந்து கட்டி நிற்கும்.

கில்லீஸ் எப்படி?

அதே சமயம் அவர்களுக்கு எல்லா வகையிலும் சவால் அளிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியினர் தங்களை பட்டை தீட்டி வருகிறார்கள். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி லீக் சுற்றில் தூத்துக்குடியை தவிர்த்து மற்ற 6 ஆட்டங்களிலும் அபார வெற்றி கண்டது. இதே போல் பிளே–ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் தூத்துக்குடியிடம் தோல்வி அடைந்தாலும் 2–வது வாய்ப்பில் கோவை கிங்சை தோற்கடித்து தொடர்ந்து 2–வது முறையாக இறுதிப்போட்டியை உறுதி செய்தது.

கில்லீஸ் அணியில் பேட்டிங்கில் விக்கெட் கீப்பர் கார்த்திக், தலைவன் சற்குணம், கோபிநாத், அந்தோணிதாஸ், சசிதேவ் பார்மில் இருக்கிறார்கள். சாய் கிஷோர், அலெக்சாண்டர் ஆகியோர் சுழற்பந்துவீச்சில் மிரட்டக்கூடியவர்கள். சாய் கிஷோர் (15 விக்கெட்) தான் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோரின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

கடந்த ஆண்டு தூத்துக்குடிக்கு எதிராக 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இந்த சீசனிலும் அவர்களிடம் இரண்டு முறை பணிந்துள்ளது. அதற்கு எல்லாம் வட்டியும் முதலுமாக பழிதீர்க்க சரியான சந்தர்ப்பம் கனிந்துள்ளது.

ரூ.1 கோடி பரிசு

கச்சிதமான பீல்டிங், மனரீதியாக தளர்ந்து விடாமல் கடைசி வரை மல்லுகட்டுவது, கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழப்பதை தடுப்பதில் கூடுதல் கவனம், கணிசமான ஸ்கோரை அடைய துல்லியமான வியூகங்கள் இவற்றை எல்லாம் கில்லீஸ் அணியினர் நேர்த்தியாக செய்தால் போதும். நிச்சயம் தூத்துக்குடியின் கம்பீர பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டு விடலாம்.

பட்டையை கிளப்பப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசுத்தொகையாக கிடைக்கும்.

அணி விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கோபிநாத், தலைவன் சற்குணம், கார்த்திக், வசந்த் சரவணன், சசிதேவ், அந்தோணிதாஸ், ஆர்.சதீஷ் (கேப்டன்), யோ மகேஷ், அருண்குமார், சாய் கிஷோர், அலெக்சாண்டர்.

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்: வாஷிங்டன் சுந்தர், கவுசிக் காந்தி, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), அபினவ் முகுந்த், அதிசயராஜ் டேவிட்சன், ஆனந்த், அவுசிக் சீனிவாஸ், அஸ்வின் கிறிஸ்ட், ஆகாஷ்

சும்ரா, கணேஷ்மூர்த்தி, எஸ்.பி.நாதன்.

இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், விஜய் சூப்பர் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மழை வாய்ப்பு?

சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

ஒரு வேளை போட்டிக்கு மழையால் நீண்ட நேரம் பாதிப்பு ஏற்பட்டால், குறைந்தபட்சம் 5 ஓவர் கொண்ட போட்டியாக நடத்த முயற்சிக்கப்படும். அதற்கும் வருணபகவான் வழிவிடாமல் ஆட்டத்தை ரத்து செய்ய நேர்ந்தால், இரு அணிகளும் கூட்டாக சாம்பியன் கோப்பையை வென்றதாக அறிவிக்கப்படும் என்று டி.என்.பி.எல். கிரிக்கெட் அமைப்பின் செய்தி தொடர்பாளர் டாக்டர் பாபா தெரிவித்தார்.

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த விதம்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

லீக் சுற்று:

திருவள்ளூர் வீரன்சுடன் 6 விக்கெட்டில் வெற்றி

கோவை கிங்சுடன் 6 விக்கெட்டில் வெற்றி

தூத்துக்குடியுடன் 27 ரன்னில் தோல்வி

காரைக்குடியுடன் 6 விக்கெட்டில் வெற்றி

மதுரையுடன் 5 விக்கெட்டில் வெற்றி

திருச்சி வாரியர்சுடன் 6 விக்கெட்டில் வெற்றி

திண்டுக்கல் டிராகன்சுடன் 5 விக்கெட்டில் வெற்றி

பிளே–ஆப் சுற்று:

முதலாவது தகுதி சுற்றில் தூத்துக்குடியுடன் 8 விக்கெட்டில் தோல்வி

2–வது தகுதி சுற்றில் கோவை கிங்சுடன் 27 ரன்னில் வெற்றி

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

லீக் சுற்று:

திண்டுக்கல் டிராகன்சுடன் 7 ரன்னில் வெற்றி

திருச்சி வாரியர்சுடன் 10 விக்கெட்டில் வெற்றி

காரைக்குடியுடன் 6 விக்கெட்டில் வெற்றி

சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் 27 ரன்னில் வெற்றி

கோவை கிங்சுடன் 6 விக்கெட்டில் வெற்றி

திருவள்ளூர் வீரன்சுடன் 6 விக்கெட்டில் வெற்றி

மதுரையுடன் 137 ரன்னில் வெற்றி

பிளே–ஆப் சுற்று:

முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் 8 விக்கெட்டில் வெற்றி


Next Story