டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ‘சாம்பியன்’ தூத்துக்குடி அணியை வீழ்த்தியது


டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ‘சாம்பியன்’ தூத்துக்குடி அணியை வீழ்த்தியது
x
தினத்தந்தி 20 Aug 2017 10:30 PM GMT (Updated: 20 Aug 2017 9:07 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் தூத்துக்குடியை சாய்த்து பட்டையை கிளப்பியது.

இறுதிப்போட்டி

2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சும், சேப்பாக் சூப்பர் கில்லீசும் பலப்பரீட்சை நடத்தின.

‘டாஸ்’ ஜெயித்த தூத்துக்குடி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன் சுந்தர், கவுசிக் காந்தி அடியெடுத்து வைத்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சாய்கிஷோரின் தாக்குதல் மூலம் ஆரம்பித்தது. முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த வாஷிங்டன் சுந்தர் அடுத்த பந்தை தூக்கியடித்தார். அதை பவுண்டரி அருகே அந்தோணிதாஸ் கோட்டை விட்டதால் அவர் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பினார். அந்த ஓவரிலேயே வாஷிங்டன் சுந்தர் சிக்சர் மற்றும் பவுண்டரி விரட்டி 12 ரன்கள் சேர்த்தார். கவுசிக் காந்தியும் அடித்து ஆடியதால் தொடக்கத்தில் ரன்விகிதம் கொஞ்சம் வேகமாக உயர்ந்தது.

வாஷிங்டன் 14 ரன்

முந்தைய ஆட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய வாஷிங்டன் சுந்தரை, இந்த முறை கில்லீஸ் பவுலர்கள் அடக்கினர். 12 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் சதீஷ் பந்து வீச்சில் சாய்கிஷோரிடம் அவர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து அபினவ் முகுந்த் களம் இறங்கினார். 4.3 ஓவர்களில் தூத்துக்குடி அணி ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை பாதிப்பால் சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு ஆட்டம் தொடர்ந்தது.

கவுசிக் காந்தி, அபினவ் முகுந்த் ஜோடி நிதானமாகவும், அதேநேரத்தில் நேர்த்தியாகவும் அடித்து ஆடியது. அணியின் ஸ்கோர் 52 ரன்களை எட்டிய போது, கவுசிக் காந்தி (24 ரன், 19 பந்து, 3 பவுண்டரி) அலெக்சாண்டரின் சுழலில் மூழ்கினார்.

நிலைத்து நின்று ஆடிய அபினவ் முகுந்த் தனது பங்குக்கு 41 ரன்களும் (38 பந்து, 4 பவுண்டரி), கேப்டன் தினேஷ் கார்த்திக் 17 ரன்னும் (16 பந்து, 2 பவுண்டரி) சேர்த்து அருண்குமாரின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். தினேஷ் கார்த்திக் ஆட்டம் இழந்ததும் போட்டி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவர்களின் ரன்வேகத்துக்கும் முட்டுக்கட்டை விழுந்தது.

தூத்துக்குடி 143 ரன்

17-வது ஓவரில் சாய்கிஷோரின் பந்து வீச்சில் ஆனந்த் சுப்ரமணியன் (1 ரன்), நாதன் (16 ரன்கள், 11 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) அடுத்தடுத்த பந்தில் ஆட்டம் இழந்தது திருப்புமுனையாக அமைந்தது. அத்துடன் மேலும் சில விக்கெட்டுகள் சரிந்ததால் அந்த அணியால் 150 ரன்களை கூட தொட முடியாமல் போய் விட்டது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தூத்துக்குடி அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் சாய்கிஷோர், அருண்குமார் தலா 2 விக்கெட்டும், சதீஷ், அலெக்சாண்டர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சாம்பியன்

அடுத்து 144 ரன்கள் இலக்கை நோக்கி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் தலைவன் சற்குணமும், கோபிநாத்தும் தூத்துக்குடியின் சவாலை சமாளித்து பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் திரட்டி வலுவான அஸ்திவாரம் போட்டனர். இதன் பின்னர் ஆகாஷ் சும்ரா ஒரு ஓவரை மெய்டனாக வீச, நெருக்கடி உருவானது. இந்த பதற்றத்தில் தலைவன் சற்குணம் (16 ரன், 31 பந்து, 2 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் கார்த்திக் 16 ரன்னிலும், அந்தோணி தாஸ் 4 ரன்னிலும் வெளியேறினர்.

மறுபுறம் கோபிநாத் நங்கூரம் போல் நிலைத்து கொண்டு அணியை தூக்கி நிறுத்தினார். அரைசதத்தை பதிவு செய்த கோபிநாத் (50 ரன், 38 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) முக்கியமான கட்டத்தில் கேட்ச் ஆக, மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. வெற்றி யாருக்கு என்பது மதில் மேல் பூனையாக தெரிந்ததால் குழுமியிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பரபரப்பின் உச்சத்திற்கே சென்றனர்.

இந்த சூழலில் கேப்டன் சதீஷ், வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜின் ஓவரில் 2 சிக்சர் பறக்க விட்டு, கில்லீஸ் அணியை நிம்மதி பெருமூச்சு விட வைத்தார்.

கடைசி 2 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டன. திரிலிங்கான 19-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வீசினார். சதீசும், வசந்த் சரவணனும் களத்தில் இருந்தனர். முதல் பந்தில் ‘பைஸ்’ வகையில் 4 ரன் கிடைத்தது. 2-வது பந்தில் 2 ரன்னும், 3-வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தனர்.

4-வது மற்றும் 5-வது பந்துகளில் வசந்த் சரவணன் சிக்சர்களை விளாசி அட்டகாசப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக 6-வது பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

ரூ.1 கோடி பரிசு

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது. சதீஷ், வசந்த் சரவணன் தலா 23 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 10 பந்தில் 23 ரன்கள் திரட்டி வெற்றிக்கு வித்திட்ட வசந்த் சரவணன் ஆட்டநாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதை தூத்துக்குடி ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் பெற்றனர்.

வாகை சூடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடித்த தூத்துக்குடி பேட்ரியாட்சுக்கு ரூ.60 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

Next Story