இந்திய அணியின் வெற்றி தொடருமா? 2-வது ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது


இந்திய அணியின் வெற்றி தொடருமா? 2-வது ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 21 Sep 2017 12:00 AM GMT (Updated: 20 Sep 2017 7:28 PM GMT)

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. இந்திய அணியின் வெற்றி தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கொல்கத்தா,

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 87 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த போதிலும், அதன் பிறகு டோனி (79 ரன்), ஹர்திக் பாண்ட்யா (83 ரன்) ஆகியோரின் அபார ஆட்டத்தால் தலைநிமிர்ந்தது. 2-வது இன்னிங்சில் மழை குறுக்கிட்டதால் 21 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ‘சரண்’ அடைந்தது.

குறிப்பாக கை மணிக்கட்டை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசுவதில் கைதேர்ந்த யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மிரட்டினர். இன்றைய ஆட்டத்திலும் அவர்கள் தான் பிரதான அஸ்திரங்களாக இருப்பார்கள். கடந்த சில ஆட்டங்களில் சரிவர சோபிக்காத ரஹானே, பார்முக்கு திரும்பாவிட்டால் இடத்தை இழக்க நேரிடும் என்பதால் ரன் குவிக்க முயற்சிப்பார். மற்றபடி வலுவான நிலையில் திகழும் இந்திய அணி வெற்றிப்பயணத்தை தொடருவதில் தீவிரம் காட்டும்.

சுழற்பந்து வீச்சாளர் 22 வயதான குல்தீப் யாதவ் கூறுகையில், ‘சென்னை ஆட்டத்தில் ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னரின் விக்கெட்டை கைப்பற்றினேன். எனது பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது அவர் நிறைய நெருக்கடியில் இருப்பார் என்று நினைக்கிறேன்.

இதுவே, அவரை எந்த நேரத்திலும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு தருகிறது. எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அவருக்கு எதிராக உற்சாகமாக பந்து வீசுகிறேன். சரியாக திட்டமிட்டு பந்து வீசினால் அவரை சீக்கிரம் வீழ்த்தி விட முடியும்’ என்றார்.

உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து எழுச்சி பெற்று பதிலடி கொடுக்கும் முனைப்புடன் உள்ளது. சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளிப்பதற்கு கூடுதல் வியூகங்களுடன் களம் இறங்குவார்கள். கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று ஆடுவதை பொறுத்தே அந்த அணியின் ஸ்கோர் அமையும்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறுகையில், ‘முதலாவது ஒரு நாள் போட்டியில், 2-வது பேட்டிங் செய்யும் போது 20 ஓவர் போட்டி போன்று தான் இருந்தது. 50 ஓவர்கள் நடந்திருந்தால் எங்களது வீரர்கள் சரியான உத்வேகத்துடன் போராடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். எங்கள் வீரர்கள் மீது இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. அடுத்து வரும் ஆட்டங்களில் இந்தியாவுக்கு கடும் சவால் கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.

66 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட கொல்கத்தா ஈடன்கார்டனில் இதுவரை 29 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 20 ஆட்டங்களில் பங்கேற்று 11-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

ஆஸ்திரேலிய அணி இங்கு 2 ஆட்டத்தில் விளையாடி (1987-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக, 2003-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக) இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. 2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா 5 விக்கெட்டுக்கு 404 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் அதிகபட்சமாகும். இந்த ஆட்டத்தில் தான் இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா 264 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இங்கு முதலில் பேட் செய்த அணிகள் 17 முறையும், 2-வது பேட் செய்த அணிகள் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கொல்கத்தாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை பெய்ததால் வீரர்களின் பயிற்சி பாதிக்கப்பட்டது. இன்றைய ஆட்டமும் மழையால் பாதிக்க கணிசமான அளவு வாய்ப்பு உள்ளது. பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவித்து உள்ளன.

மழையின் தாக்கம் காரணமாக, ஆடுகளத் தன்மையை கணிப்பது கடினமான விஷயமாகும். அதனால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். ஆடுகளத்தில் ஓரளவு புற்கள் இருப்பதை பார்க்கும் போது, வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கலாம்.
அணி விவரம்
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரஹானே, ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), மனிஷ் பாண்டே அல்லது லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், மேத்யூ வேட், ஜேம்ஸ் பவுல்க்னெர், கம்மின்ஸ், நாதன் கவுல்டர்-நிலே, ஆடம் ஜம்பா.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு இது 100-வது ஒரு நாள் போட்டியாகும். 28 வயதான சுமித் இதுவரை 99 ஆட்டங்களில் விளையாடி 8 சதங்களுடன் 3,188 ரன்கள் எடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளேன். ஒரு நாள் போட்டியில் விளையாட தொடங்கிய போது, முதல் 30-க்கும் மேலான ஆட்டங்களில் பெரும்பாலும் ஒரு பவுலராகவே அடையாளம் காணப்பட்டேன்.

அதன் பிறகு அதில் கொஞ்சம் மாற்றம் செய்தேன். இப்போது 3-வது வரிசையில் பேட்டிங் செய்கிறேன். 100-வது போட்டியில் பங்கேற்க இருப்பதை நினைத்து பரவசமடைகிறேன். கிரிக்கெட்டை பொறுத்தவரை இன்னும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன். இதில் ஒரு போதும் திருப்தி அடைய முடியாது. உலகின் சிறந்த வீரராக இருக்க விரும்பினால், தொடர்ந்து கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அதைத் தான் நானும் செய்கிறேன்’ என்றார்.

சுமித் மேலும் கூறுகையில், ‘2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில், சிட்னியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதியில் சதம் அடித்ததை (105 ரன்) எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு இன்னிங்சாக சொல்வேன்’ என்றார்.

Next Story