ஸ்ரீசாந்த் வேறு நாட்டு அணிக்காக விளையாட முடியாது இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம்


ஸ்ரீசாந்த் வேறு நாட்டு அணிக்காக விளையாட முடியாது இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம்
x
தினத்தந்தி 21 Oct 2017 9:30 PM GMT (Updated: 21 Oct 2017 8:29 PM GMT)

ஸ்ரீசாந்த் வேறு நாட்டு அணிக்காக விளையாட முடியாது என இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை நீக்கப்பட்டதை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் கேரள ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் முன்பு அப்பீல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி நவ்நிதி பிரசாத் சிங் தலைமையிலான டிவிசன் பெஞ்ச், ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடை தொடரும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இது குறித்து ஸ்ரீசாந்த் கருத்து தெரிவிக்கையில், ‘இந்திய கிரிக்கெட் வாரியம் தான் எனக்கு தடை விதித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனக்கு தடை விதிக்கவில்லை. இந்தியாவுக்கு ஆட முடியாததால் அடுத்த நாட்டுக்காக விளையாட நான் விரும்புகிறேன்’ என்று தெரிவித்து இருந்தார். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு தலைவர் சி.கே.கண்ணாவிடம் கேட்ட போது, ‘சொந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் தடை விதிக்கப்பட்ட ஒரு வீரர் வேறு நாட்டு அணிக்காக விளையாட முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிமுறையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஸ்ரீசாந்த் வேறு எந்த நாட்டு அணிக்காகவும் விளையாட முடியாது’ என்று தெரிவித்தார்.

Next Story