இந்திய கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் இன்று களம் இறங்குகிறது, இலங்கை அணி


இந்திய கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் இன்று களம் இறங்குகிறது, இலங்கை அணி
x
தினத்தந்தி 10 Nov 2017 10:00 PM GMT (Updated: 10 Nov 2017 9:33 PM GMT)

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவனுக்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி இன்று களம் இறங்குகிறது.

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவனுக்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி இன்று களம் இறங்குகிறது.

பயிற்சி கிரிக்கெட்

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் வருகிற 16–ந்தேதி தொடங்குகிறது.

அதற்கு முன்பாக இலங்கை அணி ஒரு ஆட்டத்திலும் விளையாடுகிறது. இதன்படி இலங்கை– இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்புர் பல்கலைக்கழக மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

மேத்யூஸ் வருகை

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி எளிதாக இருக்காது என்பதை இலங்கை வீரர்கள் உணர்ந்துள்ளனர். தற்போது வந்துள்ள இலங்கை அணி வீரர்களில் ஆல்–ரவுண்டர் மேத்யூஸ், சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் தவிர வேறு யாருக்கும் இந்திய மண்ணில் டெஸ்டில் விளையாடிய அனுபவம் கிடையாது.

இதுவரை இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதில்லை என்ற நீண்டகால சோகத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதில் இலங்கை அணியினர் தீவிரமாக இருக்கிறார்கள். அதற்கு தயாராகுவதற்கு இந்த பயிற்சி களத்தை இலங்கை வீரர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பார்கள். பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் பாகிஸ்தான் தொடரில் ஆடாத மேத்யூசுக்கு தனது உடல்தகுதியை நிரூபிப்பதற்கு இந்த ஆட்டம் உதவிகரமாக இருக்கும்.

சாம்சன் கேப்டன்

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு கேப்டனாக கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், தற்போது 5–வது லீக் சுற்றில் ஆடாத ஐதராபாத், கேரளா, மத்தியபிரதேசம், பஞ்சாப் ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்களை மட்டுமே இந்த பயிற்சி ஆட்டத்திற்கு தேர்வு செய்துள்ளது. அதாவது இது 3–ம் தரம் அணியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த அணியிலும் திறமையான இளம் வீரர்கள் அங்கம் வகிப்பதால் இலங்கை வீரர்களுக்கு கடும் போட்டி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:–

இலங்கை: சன்டிமால் (கேப்டன்), கருணாரத்னே, சமரவிக்ரமா, திரிமன்னே, நிரோ‌ஷன் டிக்வெல்லா, தில்ருவான் பெரேரா, ஹெராத், சுரங்கா லக்மல், லாஹிரு காமகே, தனஞ்ஜெயா டி சில்வா, மேத்யூஸ், சன்டகன், விஷ்வா பெர்னாண்டோ, தசுன் ‌ஷனகா, ரோ‌ஷன் சில்வா.

கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி: சஞ்சு சாம்சன் (கேப்டன்), அபிஷேக் குப்தா, ஆகாஷ் பன்டாரி, அவேஷ் கான், ஜலஜ் சக்சேனா, ஜிவான்ஜோத்சிங், ரவி கிரண், ரோகன் பிரேம், சந்தீப், தன்மய் அகர்வால், சந்தீப் வாரியர், அன்மோல்பிரீத் சிங்.


Next Story