மத்தியபிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: முன்னிலை பெற தமிழக அணி போராட்டம்


மத்தியபிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: முன்னிலை பெற தமிழக அணி போராட்டம்
x
தினத்தந்தி 18 Nov 2017 10:30 PM GMT (Updated: 18 Nov 2017 7:12 PM GMT)

தமிழகம்- மத்தியபிரதேசம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (சி பிரிவு) இந்தூரில் நடந்து வருகிறது.

இந்தூர்,

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழகம்- மத்தியபிரதேசம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (சி பிரிவு) இந்தூரில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த மத்தியபிரதேச அணி தொடக்க நாளில் 7 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 264 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. தமிழகம் தரப்பில் கே.விக்னேஷ் 4 விக்கெட்டுகளும், முகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி, ஈஷ்வர் பாண்டே, புனீத் டேட் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதுடன், 76 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதில் கேப்டன் அபினவ் முகுந்த் (5 ரன்), வாஷிங்டன் சுந்தர் (9 ரன்) ஒற்றை இலக்கில் வீழ்ந்ததும் அடங்கும். இதன் பிறகு விக்கெட் கீப்பர் ஜெகதீசனும், ஆல்-ரவுண்டர் யோ மகேசும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

முதல் இன்னிங்சில் முன்னிலை பெற போராடும் தமிழக அணி ஆட்ட நேர இறுதியில் 67 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. ஜெகதீசன் 94 ரன்களுடனும், யோ மகேஷ் 44 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

Next Story