ஏலத்தொகை உயர்வு: ஐ.பி.எல். அணிகள் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி


ஏலத்தொகை உயர்வு: ஐ.பி.எல். அணிகள் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி
x
தினத்தந்தி 6 Dec 2017 9:15 PM GMT (Updated: 6 Dec 2017 8:37 PM GMT)

ஐ.பி.எல். அணிகள் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஐ.பி.எல். அணிகள் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கூட்டம்

சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. தடை காலம் முடிந்து சென்னை, ராஜஸ்தான் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் 11–வது ஐ.பி.எல். போட்டியில் மறுபிரவேசம் செய்ய உள்ளன.

இவ்விரு அணிகளுக்கும், முன்பு விளையாடிய வீரர்களை தக்கவைக்க அனுமதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் அது தொடர்பாக விவாதிக்க ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு:–

5 வீரர்கள் தொடரலாம்

*தக்கவைப்பு மற்றும் ஏலத்தின் போது பயன்படுத்தப்படும் ‘மேட்ச் கார்டு’ மூலம் ஒவ்வொரு அணிகளும் 5 வீரர்களை வரை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதில் ‘மேட்ச் கார்டு’வை தவிர்த்து பார்த்தால் நேரடியாக 3 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும்.

இந்த வகையில் மீண்டும் ஐ.பி.எல்.போட்டிக்கு திரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடைசியாக 2015–ம் ஆண்டில் தங்கள் அணிக்காக விளையாடி அதன் பிறகு 2017–ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயன்ட், குஜராத் லயன்ஸ் அணிகளுக்காக ஆடிய வீரர்களில் இருந்து 5 பேரை தக்கவைத்துக்கொள்ளலாம்.

*தக்கவைக்கப்படும் 5 வீரர்களில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய இந்தியர்களின் எண்ணிக்கை 3–ஐ தாண்டக்கூடாது. இதே போல் வெளிநாட்டு வீரர்களை அதிகபட்சமாக 2 பேரையும், இந்திய உள்ளூர் வீரர்களை அதிகபட்சமாக 2 பேரையும் அணியில் தொடர வைக்கலாம்.

*தக்க வைக்கப்படும் 5 வீரர்களுக்கு முறையே ரூ.12½ கோடி, 9½ கோடி, ரூ.7½ கோடி, ரூ.5½ கோடி, ரூ.4 கோடி வீதம் ஒப்பந்த ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

*ஒரு வேளை ஒரு அணி 3 வீரர்களை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தால் அதில் முதலாவது வீரருக்கு ரூ.15 கோடியும், 2–வது வீரருக்கு ரூ.11 கோடியும், 3–வது வீரருக்கு ரூ.7 கோடியும் வழங்க வேண்டும். 2 வீரர் என்றால் ரூ.12½ கோடி, 8½ கோடி வீதமும், ஒரு வீரர் மட்டும் என்றால் ரூ.12½ கோடியும் கொடுக்க வேண்டும்.

ஏலத் தொகை உயர்வு

*அணி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று வீரர்களை ஏலத்தில் எடுக்க செலவிடப்படும் தொகை ரூ.66 கோடியில் இருந்து ரூ.80 கோடியாக உயர்த்தப்படுகிறது. 2019–ம் ஆண்டு இந்த தொகை ரூ.82 கோடி, 2020–ம் ஆண்டு ரூ.85 கோடி என்று அதிகரிக்கப்படும்.

ஒரு அணி 3 வீரர்களை தக்கவைத்துக்கொண்டால் அதற்குரிய மொத்த தொகை ரூ.33 கோடியை கழித்து மீதமுள்ள ரூ.47 கோடியை வைத்து தான் எஞ்சிய வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.

*சர்வதேச போட்டிகளில் ஆடாத உள்ளூர் வீரர்களுக்கு ஏலத்தின் போது அடிப்படை விலை ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம் வீதம் முன்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அந்த தொகை இனி ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம் வீதம் உயர்த்தப்படுகிறது. அதே சமயம் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களின் அடிப்படை விலையில் ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி ஆகியவற்றில் மாற்றம் இல்லை. அதே சமயம் ரூ.30 லட்சம், ரூ.50 லட்சம் முறையே ரூ.50 லட்சம், ரூ.75 லட்சம் என்று மாற்றப்பட்டுள்ளது.

*ஏலம் முடிவில் ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்களும், குறைந்த பட்சம் 18 வீரர்களும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதில் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை 8–ஐ தாண்டக்கூடாது.

மேற்கண்ட தகவல்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலம் எப்போது?

இரண்டு ஆண்டுகள் மட்டும் விளையாடிய புனே சூப்பர் ஜெயன்ட், குஜராத் லயன்ஸ் அணிகள் இனி ஐ.பி.எல்.–ல் கிடையாது. புனே அணிக்காக விளையாடிய ஆல்–ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், முன்பு சென்னை அல்லது ராஜஸ்தான் அணிக்காக ஆடியவர் இல்லை என்பதால் அவர் மறுபடியும் ஏலத்திற்கு வருகிறார்.

வீரர்கள் ஏலம் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியிலோ அல்லது பிப்ரவரி தொடக்கத்திலேயோ நடைபெறும் என்று ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா நிருபர்களிடம் தெரிவித்தார்.

சென்னை அணிக்கு திரும்புகிறார், டோனி

ஐ.பி.எல். நிர்வாகம் அனுமதி வழங்கியதன் மூலம் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டோனியை தக்கவைத்துக் கொள்வதில் உள்ள சிக்கல் நீங்கியது. அவர் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை. இதே போல் சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் இருவரை சென்னை அணி வைத்துக் கொள்ளவும் முயற்சிக்கும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்டீவன் சுமித், ரஹானே ஆகியோர் தக்கவைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story