சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் பீலேவை முந்தினார், ரொனால்டோ


சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் பீலேவை முந்தினார், ரொனால்டோ
x
தினத்தந்தி 1 Sep 2017 9:30 PM GMT (Updated: 1 Sep 2017 8:01 PM GMT)

2018–ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்று போட்டியில் போர்ச்சுகல்லில் உள்ள போர்டோவில் நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் அணி, பேரோ தீவு அணியை

போர்டோ,

2018–ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்று போட்டியில் போர்ச்சுகல்லில் உள்ள போர்டோவில் நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் அணி, பேரோ தீவு அணியை சந்தித்தது. இதில் போர்ச்சுகல் அணி 5–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 3 கோல்கள் அடித்தார். 144–வது சர்வதேச போட்டியில் ஆடிய ரொனால்டோ மொத்தம் 78 கோல்கள் அடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் பிரேசில் ஜாம்பவான் பீலேவை (77 கோல்கள், 91 போட்டிகளில்) ரொனால்டோ முந்தினார். அத்துடன் சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த ஐரோப்பிய வீரர்கள் வரிசையில் ரொனால்டோ 2–வது இடத்தை பிடித்துள்ளார். ஹங்கேரி வீரர் பெரென் புஸ்காஸ் (84 கோல்கள், 89 போட்டிகளில்) அதிக கோல் அடித்த ஐரோப்பிய வீரர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். அவரது இடத்தை பிடிக்க ரொனால்டோவுக்கு இன்னும் 6 கோல்கள் தேவைப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 5–வது இடத்தை ஈராக் வீரர் ஹூசைன் சயீத்துடன் இணைந்து பிடித்துள்ளார். இந்த வகையில் ஈரான் வீரர் அல் டாய் 149 போட்டியில் ஆடி 109 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.


Next Story