உலக கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து, குரோஷியா அணிகள் தகுதி


உலக கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து, குரோஷியா அணிகள் தகுதி
x
தினத்தந்தி 13 Nov 2017 11:15 PM GMT (Updated: 13 Nov 2017 7:20 PM GMT)

ரஷியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு சுவிட்சர்லாந்து, குரோஷியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

பாசெல்,

உலக கோப்பை கால்பந்து திருவிழா 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் அடுத்த ஆண்டு (2018) ஜூன் 14-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும். போட்டியை நடத்தும் ரஷியா தவிர எஞ்சிய அனைத்து அணிகளும் தகுதி சுற்று போட்டிகள் மூலம் தகுதி பெறும். தகுதி சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘பிளே-ஆப்’ சுற்று 2-வது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து- வடக்கு அயர்லாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.

2 ஆட்டங்கள் கொண்ட பிளே-ஆப் சுற்றில் முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்தை வீழ்த்தி இருந்தது. அந்த வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து அணி தொடர்ச்சியாக 4-வது முறை உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி மொத்தத்தில் 11-வது முறையாக களம் காணுகிறது. தோல்வி கண்டதால் வடக்கு அயர்லாந்துக்கு முதல்முறையாக உலக போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு மயிரிழையில் நழுவியது.

‘முதல் சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி வீரர் ரிச்சர்டோ ரோட்ரிக்ஸ்க்கு பெனால்டி அளித்த நடுவரின் தவறான தீர்ப்பே எங்கள் அணி உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேற வழிவகுத்தது’ என்று வடக்கு அயர்லாந்து அணியின் மானேஜர் மிச்செல் ஓ நெல் புகார் தெரிவித்துள்ளார்.

கிரீஸ் நாட்டில் பிராயூஸ் நகரில் நடந்த ‘பிளே-ஆப்’ சுற்று 2-வது ஆட்டத்தில் குரோஷியா-கிரீஸ் அணிகள் சந்தித்தன. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டமும் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. இருப்பினும் முதல் ஆட்டத்தில் குரோஷியா அணி 4-1 என்ற கோல் கணக்கில் கிரீசை தோற்கடித்து இருந்ததால் குரோஷியா அணி 5-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு, போட்டியை நடத்தும் நாடான ரஷியா, பிரேசில், ஈரான், ஜப்பான், மெக்சிகோ, பெல்ஜியம், தென்கொரியா, சவூதி அரேபியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், நைஜீரியா, கோஸ்டாரிகா, போலந்து, எகிப்து, ஐஸ்லாந்து, செர்பியா, போர்ச்சுகல், பிரான்ஸ், உருகுவே, அர்ஜென்டினா, கொலம்பியா, பனாமா, செனகல், மொராக்கோ, துனிசியா, சுவிட்சர்லாந்து, குரோஷியா ஆகிய 28 அணிகள் தகுதி பெற்றுள்ளன. மேலும் 4 நாடுகள் மட்டுமே தகுதி பெற வேண்டியது இருக்கிறது.

Next Story