ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 3 Dec 2017 11:00 PM GMT (Updated: 3 Dec 2017 9:58 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி புனேயை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

புனே,

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேயில் நேற்று மாலை நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி. புனே சிட்டியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் இரு அணி வீரர்களும் மாறி மாறி எதிரணி கோல் கம்பத்தை முற்றுகையிட்ட போதிலும் கோலாக்கும் முயற்சி ஈடேறவில்லை. முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை.

82-வது நிமிடத்தில் சென்னையின் எப்.சி. வீரர் ஜெய்ம் காவிலன் கார்னர் பகுதியில் இருந்து தூக்கியடித்த பந்தை, சென்னை கேப்டன் ஹென்ரிக் செரனோ தலையால் முட்டி அருமையாக கோலாக்கினார். அதுவே வெற்றி கோலாக அமைந்தது. முடிவில் சென்னையின் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் புனேயை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்தது. அத்துடன் புனே அணியிடம் இதுவரை தோற்றது கிடையாது என்ற பெருமையையும் சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது. 3-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

கொச்சி நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. போட்டியில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். சென்னையின் எப்.சி. அணி தனது அடுத்த ஆட்டத்தில் 7-ந்தேதி கொல்கத்தா அணியை சென்னை நேரு ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.

Next Story