ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை பந்தாடியது கோவா கோரோமினாஸ் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார்


ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை பந்தாடியது கோவா கோரோமினாஸ் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார்
x
தினத்தந்தி 9 Dec 2017 8:30 PM GMT (Updated: 9 Dec 2017 7:57 PM GMT)

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 20–வது லீக் ஆட்டத்தில் எப்.ச்.கோவா– கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

கவுகாத்தி,

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 20–வது லீக் ஆட்டத்தில் எப்.ச்.கோவா– கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டன. கோவா அணியில் மானுல் லான்ஜரோட்டும் (9, 18–வது நிமிடம்), கேரளா அணியில் மார்க் சிப்னியாஸ் (7–வது நிமிடம்), ஜாக்கிசந்த் சிங்(31–வது நிமிடம்) ஆகியோரும் கோல் அடித்தனர்.

பிற்பாதியில் கோவா வீரர்கள் ஆக்ரோ‌ஷமாக ஆடினர். அந்த அணியின் பெரான் கோரோமினாஸ் ‘ஹாட்ரிக்’ (48, 51, 55–வது நிமிடம்) கோல் அடித்து அசத்தினார். 10 நிமிட இடைவெளிக்குள் 3 கோல்களை திணித்த கோரோமினாஸ், ஐ.எஸ்.எல். வரலாற்றில் வேகமாக ஹாட்ரிக் கோல் அடித்தவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். முடிவில் எப்.சி.கோவா அணி 5–2 என்ற கோல் கணக்கில் கேரளாவை துவம்சம் செய்து 3–வது வெற்றியை ருசித்தது. தனது முதல் 3 ஆட்டங்களில் டிரா கண்டிருந்த கேரளாவுக்கு இது முதல் தோல்வியாகும்.

இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்–புனே சிட்டி அணிகள் சந்திக்கின்றன. இரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெறம் லீக்கில் சென்னையின் எப்.சி.–மும்பை சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Next Story