மாநில ஆக்கி போட்டி: அரைஇறுதியில் ஐ.சி.எப். அணி பெனால்டி ஷூட்–அவுட்டில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தியது


மாநில ஆக்கி போட்டி: அரைஇறுதியில் ஐ.சி.எப். அணி பெனால்டி ஷூட்–அவுட்டில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தியது
x
தினத்தந்தி 14 March 2017 8:32 PM GMT (Updated: 14 March 2017 8:32 PM GMT)

மாநில ஆக்கி போட்டியில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் ஐ.சி.எப். அணி பெனால்டி ஷூட்–அவுட்டில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

சென்னை,

மாநில ஆக்கி போட்டியில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் ஐ.சி.எப். அணி பெனால்டி ஷூட்–அவுட்டில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

மாநில ஆக்கி போட்டி

இந்தியன் வங்கியின் விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றம் சார்பில் மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

4–வது நாளான நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் மத்திய கலால் வரி–இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) அணிகள் மோதின. இதில் மத்திய கலால் வரி அணி முதல் பாதியில் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்தது. அந்த அணியின் ஹசன் பாஷா 17–வது நிமிடத்திலும், மச்சையா 20–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முதல் பாதியில் மத்திய கலால் வரி அணி 2–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

அரைஇறுதியில் கலால் வரி அணி

பின்பாதி ஆட்டத்தில் சாய் அணி பதில் கோல் திருப்ப கடுமையாக முயற்சி மேற்கொண்டது. 66–வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி சாய் அணி வீரர் வினோதன் பதில் கோல் திருப்பினார். அடுத்த நிமிடத்தில் மத்திய கலால் வரி அணி 3–வது கோலை பதிவு செய்தது. முதல் கோலை அடித்த ஹசன் பாஷாவே இந்த கோலையும் போட்டார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்க முடியாததால் மத்திய கலால் வரி அணி 3–1 என்ற கோல் கணக்கில் சாய் அணியை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஐ.சி.எப்.–தெற்கு ரெயில்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டின. வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்தன. ஐ.சி.எப். அணி சார்பில் தீபக் பராசுரம் முதலாவது மற்றும் 11–வது நிமிடத்திலும், திலீபன் 66–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். தெற்கு ரெயில்வே அணி தரப்பில் திவாகரன் 32–வது நிமிடத்திலும், வர்மா 53–வது நிமிடத்திலும், மனோஜ் 65–வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள்.

பெனால்டி ஷூட்டில் ஐ.சி.எப். வெற்றி

இரு அணிகளும் சமநிலை வகித்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்–அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஐ.சி.எப். அணி 5–4 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வே அணியை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

இன்று (புதன்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி–மத்திய கலால் வரி (காலை 6.30 மணி), இந்தியன் வங்கி–தெற்கு ரெயில்வே (காலை 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story