இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளராக மர்ஜின் நியமனம்


இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளராக மர்ஜின் நியமனம்
x
தினத்தந்தி 8 Sep 2017 9:45 PM GMT (Updated: 8 Sep 2017 7:03 PM GMT)

இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஜோட் மர்ஜினும், இந்திய பெண்கள் அணியின் உயர் செயல்திறன் சிறப்பு பயிற்சியாளராக ஹரேந்திர சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் (நெதர்லாந்து) கடந்த 2-ந் தேதி அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணிக்கு சீரான வெற்றி கிடைக்கவில்லை. இந்த ஆண்டில் மலேசியாவுக்கு எதிராக 2 முறையும், கனடாவுக்கு எதிராக ஒரு தடவையும் தோல்வி கண்டது ஏமாற்றம் அளித்தது. எனவே தான் ஓல்ட்மான்ஸ் மாற்றம் செய்யப்பட்டதாக ஆக்கி இந்தியா அமைப்பு தெரிவித்து இருந்தது. அத்துடன் புதிய பயிற்சியாளர் விண்ணப்பம் குறித்த அறிவிப்பும் வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக, இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் நெதர்லாந்தை சேர்ந்த ஜோட் மர்ஜின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்துள்ளார். இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா அமைப்பு ஆகியவற்றின் கூட்டு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு ஆண்கள் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ஹரேந்திர சிங், இந்திய பெண்கள் ஆக்கி அணியின் உயர் செயல்திறன் சிறப்பு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹரேந்திரசிங் இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக 2008 முதல் 2009-ம் ஆண்டு வரை இருந்து இருக்கிறார்.

43 வயதான ஜோட் மர்ஜின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டு இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஏனெனில் அவருக்கு சீனியர் ஆண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்ததில் போதிய அனுபவம் கிடையாது. ஜோட் மர்ஜின் 21 வயதுக்கு உட்பட்ட நெதர்லாந்து பெண்கள் அணி, 21 வயதுக்கு உட்பட்ட நெதர்லாந்து ஆண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். சீனா ஆண்கள் அணியின் பயிற்சியாளராக சில மாதங்கள் இருந்து இருக்கிறார்.

ஆண்கள் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க ஜோட் மர்ஜின் முதலில் தயங்கியதாகவும், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா அமைப்பினரின் சமாதானத்தை தொடர்ந்து பொறுப்பை ஏற்க சம்மதித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு இருக்கும் இந்திய பெண்கள் ஆக்கி அணியினருடன் சென்று இருக்கும் ஜோட் மர்ஜின் நாடு திரும்பியதும் வருகிற 20-ந் தேதி பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க இருக்கிறார். அடுத்த மாதம் (அக்டோபர்) டாக்காவில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் முதன்முதலாக பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இந்திய பெண்கள் அணியின் சிறப்பு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஹரேந்திரசிங் ஆண்கள் அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஜோட் மர்ஜின் அளித்த பேட்டியில், ‘தனிப்பட்ட முறையில் ஓல்ட்மான்ஸ்சிடம் பேசுகையில் எனது நியமனம் குறித்து தெரிவித்தேன். நான் அவரை அதிகம் மதிக்கிறேன். அவருடைய ஆலோசனைகளை பெற்று செயல்பட ஆர்வமாக இருக்கிறேன். ஆண்கள் அணி பயிற்சியாளராக இருக்க ஆர்வம் இல்லை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. சீனியர் ஆண்கள் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்து இருக்கிறேன். ஆனால் சர்வதேச சீனியர் அணிக்கு பயிற்சியாளராக இருந்தது இல்லை’ என்று தெரிவித்தார்.

Next Story