உலக ஆக்கி லீக் இறுதி சுற்று: இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி


உலக ஆக்கி லீக் இறுதி சுற்று: இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி
x
தினத்தந்தி 2 Dec 2017 11:15 PM GMT (Updated: 2 Dec 2017 7:51 PM GMT)

உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.

புவனேஸ்வரம்,

3-வது மற்றும் கடைசி உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அர்ஜென்டினா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

2-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் முதலிடத்திலும் உள்ள அர்ஜென்டினா அணி, 3-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. பெல்ஜியம் அணியில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி லுய்பார்ட் லோசிக் 9-வது நிமிடத்திலும், அமாய்ரி குஸ்டர்ஸ் 51-வது நிமிடத்திலும், பூன் டாம் 56-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அர்ஜென்டினா அணியில் காசெல்லா மைகோ 52-வது நிமிடத்திலும், கொனாலோ பில்லாட் 57-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள்.

மற்றொரு லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணி 3-2 என்ற கோல் கணக்கில் 4-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்தை வீழ்த்தியது. ஸ்பெயின் அணியில் குய்மடா பாவ் 15-வது நிமிடத்திலும், கொனாலெஸ் என்ரிக் 35-வது நிமிடத்திலும், அரானா டிகோ 39-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். நெதர்லாந்து அணியில் பால்க் லார்ஸ் 37-வது நிமிடத்திலும், புருய்ஜெர் லிர்கோ 55-வது நிமிடத்திலும் கோல் திணித்தார்கள்.

இன்னொரு லீக் ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா அணி, 5-வது இடத்தில் உள்ள ஜெர்மனியை எதிர்கொண்டது. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஜெர்மனி அணி தரப்பில் மார்கோ மில்ட்காவ் 7-வது நிமிடத்திலும், கேப்டன் மார்ட்டின் ஹானெர் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 58-வது நிமிடத்திலும் கோல் திணித்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் பிளாக் கவர்ஸ் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 39-வது நிமிடத்திலும், ஆரோன் 49-வது நிமிடத்தில் கோல் அடித்தனர். ஆஸ்திரேலிய அணியில் களம் கண்ட எட்டி ஒகென்டெனுக்கு இது 300-வது போட்டியாகும். 2006-ம் ஆண்டில் சர்வதேச போட்டியில் களம் கண்ட எட்டி ஒகென்டென் இதன் மூலம் 300 ஆட்டங்களில் ஆடிய 6-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் டிரா கண்டு இருந்தது. ஜெர்மனி அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை சாய்த்து இருந்தது.

மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் குட்பீல்டு 25-வது நிமிடத்திலும், சாம் வார்ட் 43-வது மற்றும் 57-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி தரப்பில் ஆகாஷ்தீப்சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 47-வது நிமிடத்திலும், ரூபிர்ந்தர்பால்சிங் 50-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் டிரா கண்டு இருந்தது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் பெல்ஜியம்-ஸ்பெயின் (மாலை 5.30 மணி), நெதர்லாந்து-அர்ஜென்டினா (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story