துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 20 March 2017 10:30 PM GMT (Updated: 20 March 2017 7:00 PM GMT)

* இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடரில் இரு அணி வீரர்கள் இடையிலான மோதல் நீருபூத்த நெருப்பு போல் நீடித்து வருகிறது.

 டி.ஆர்.எஸ். அப்பீலில் ஆரம்பித்த வார்த்தை மோதல் முற்றுப்புள்ளி இல்லாமல் தொடருகிறது. நேற்றைய ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை தவறாக கணித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் போல்டு ஆனார். இதனை இந்திய அணியினர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமர்சித்துள்ளனர். டி.ஆர்.எஸ். அப்பீல் சர்ச்சையின் போது ஸ்டீவன் சுமித் தெரிவித்த புத்தி மழுங்கி விட்டது என்ற வார்த்தையை அதில் குறிப்பிட்டுள்ளனர்.

* 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5–ந் தேதி முதல் மே 21–ந் தேதி வரை நடக்கிறது. டெல்லி மாகராட்சி தேர்தலையொட்டி ஐ.பி.எல். போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 22–ந் தேதி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடக்க இருந்த டெல்லி–மும்பை அணிகள் இடையிலான ஆட்டம் அதேநாளில் மும்பையில் இரவு 8 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் புனே–ஐதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் புனேயில் இரவு 8 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கு அரங்கேறுகிறது. மே 6–ந் தேதி மும்பையில் நடைபெற இருந்த மும்பை–டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் அதேநாளில் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.

* இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டனான டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியாகும். விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்றதால் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் 4 நாட்கள் ஆட்டத்தை நேரில் பார்க்க வரமுடியாத டோனி நேற்று ஸ்டேடியத்துக்கு நேரில் வந்து முக்கிய பிரமுகர்களுக்கான பாக்சில் அமர்ந்து ஆட்டத்தை ரசித்து பார்த்தார். ஸ்டேடியத்தில் உள்ள திரையில் டோனியை காட்டிய போதெல்லாம் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினார்கள்.

* ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டுமினி இந்த ஆண்டுக்கான போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகல் முடிவை எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story