ஆசிய பேட்மிண்டன் போட்டி முதல் சுற்றில் சிந்து, அஜய் ஜெயராம் வெற்றி சாய்னா அதிர்ச்சி தோல்வி


ஆசிய பேட்மிண்டன் போட்டி முதல் சுற்றில் சிந்து, அஜய் ஜெயராம் வெற்றி சாய்னா அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 26 April 2017 8:49 PM GMT (Updated: 26 April 2017 8:48 PM GMT)

ஆசிய பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் அஜய் ஜெயராம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வுஹான்,

ஆசிய பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் அஜய் ஜெயராம் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

சிந்து வெற்றி

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக தர வரிசையில் 3–வது இடத்தில் இருப்பவருமான இந்திய இளம் வீராங்கனை பி.வி.சிந்து, உலக தர வரிசையில் 33–வது இடத்தில் இருப்பவரான இந்தோனேஷியாவின் தினார் டியாவை சந்தித்தார். 31 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21–8, 21–18 என்ற நேர்செட்டில் தினார் டியாவை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரும், உலக தர வரிசையில் 8–வது இடத்தில் உள்ளவருமான இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 17–ம் நிலை வீரர் ஜப்பானின் சயகா சாடோவை எதிர்கொண்டார். 68 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சாய்னா 21–19, 16–21, 18–21 என்ற செட் கணக்கில் சயகா சாடோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.

பிரனாய் தோல்வி

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தர வரிசையில் 13–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 21–18, 18–21, 21–19 என்ற செட் கணக்கில் தர வரிசையில் 7–வது இடத்தில் உள்ள சீன வீரர் ஹாவெய் டினை சாய்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அஜய் ஜெயராமுக்கு 70 நிமிடம் தேவைப்பட்டது.

இன்னொரு ஒற்றையர் ஆட்டத்தில் உலக தர வரிசையில் 29–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரனாய் 16–21, 21–13, 19–21 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீரர் லாங் அங்குஸ்சிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா–சிக்கி ரெட்டி ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவிலும், அஸ்வினி–சிக்கி ரெட்டி இணை பெண்கள் இரட்டையர் பிரிவிலும், மனு அட்ரி–சுமித் ரெட்டி ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தனர்.


Next Story