தொடர் ஓட்டத்தின் போது காயத்தால் மைதானத்தில் தடுமாறி விழுந்தார் உசேன் போல்ட்


தொடர் ஓட்டத்தின் போது காயத்தால் மைதானத்தில் தடுமாறி விழுந்தார் உசேன் போல்ட்
x
தினத்தந்தி 13 Aug 2017 9:45 PM GMT (Updated: 13 Aug 2017 8:15 PM GMT)

உலக தடகளத்தில் 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் காயத்தால் மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்த உசேன் போல்ட் ஏமாற்றத்துடன் விடைபெற்றார்.

லண்டன்,

லண்டனில் இரண்டு வாரகாலமாக நடந்து வந்த 16–வது தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது.

தடகள உலகின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட், இத்துடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்ததால் அவர் மீது தான் அனைவரின் பார்வையும் பதிந்து இருந்தது. 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம் பெற்ற அவர் நேற்று முன்தினம் இரவு தனது கடைசி பந்தயமான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அடியெடுத்து வைத்தார். ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் தங்கள் அணிக்காக 4–வது வீரராக பேட்டனை பெற்றுக்கொண்டு உசேன் போல்ட் ஓடினார். அவருக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த இரண்டு வீரர்களை முந்த முனைப்பு காட்டிய வேளையில், எதிர்பாராத விதமாக காயத்தில் சிக்கினார்.

இடதுகாலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு தடுமாறிய அவர் சில அடிகள் ஒரு காலால் நொண்டியபடி ஓடினார். வலி அதிகமானதால் துடித்து போன உசேன் போல்ட் அப்படியே ஒரு குட்டிக்கரணம் போட்டு மைதானத்தில் படுத்து விட்டார். அவர் வாகை சூடுவார் என்று ஆவலோடு காத்திருந்த ரசிகர்கள் இதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதில் இங்கிலாந்து அணி தங்கப்பதக்கமும் (37.47 வினாடி) அமெரிக்கா வெள்ளியும் (37.52 வினாடி), ஜப்பான் வெண்கலமும் (38.04 வினாடி) கைப்பற்றியது.

இலக்கை நிறைவு செய்ய முடியாமல் போனதால் சக வீரர்களிடம் உசேன் போல்ட் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். கண்ணீர் மல்க, தனது தடகள வாழ்க்கைக்கு விடைகொடுத்தார். தோற்கடிக்க முடியாத வீரராக வெளியேறுவேன் என்று சூளுரைத்து வந்த உசேன் போல்ட்டின் லட்சியம் கடைசியில் ஈடேறாமல் போய் விட்டது. 30 வயதான உசேன் போல்ட் உலக தடகளத்தில் 11 தங்கம் உள்பட 14 பதக்கமும், ஒலிம்பிக்கில் 8 தங்கமும் அறுவடை செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

சக வீரர் ஜமைக்காவின் யோஹன் பிளாக் கூறும் போது, ‘இங்கு கடும் குளிர் நிலவிய நிலையில், 40 நிமிடத்திற்கு மேலாக வீரர்கள் காத்திருக்க வேண்டியதானது. இந்த ஓட்டத்திற்கு முன்பாக போட்டி அமைப்பாளர்கள் இரண்டு பரிசளிப்பு நிகழ்ச்சியை நடத்தி தாமதப்படுத்தினர். இதன் தாக்கமும் உசேன் போல்டின் காயத்துக்கு ஒரு காரணம்’ என்று குற்றம் சாட்டினார். இதே புகாரை அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லினும் கூறினார்.

இந்த சீசனுடன் ஓய்வு பெறும் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் இங்கிலாந்தின் மோ பாரா 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 13 நிமிடம் 33.22 வினாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளி வென்றார். எத்தியோப்பியா வீரர் முக்தார் எட்ரிஸ் (13 நிமிடம் 32.79 வினாடி) தங்கப்பதக்கத்தை வேட்டையாடினார். கடந்த இரு ஒலிம்பிக் மற்றும் உலக தடகளத்தில் தங்கம் வென்றிருந்த மோ பாராவும் நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்க வைக்க முடியாமல் போனது.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இறுதி சுற்றுக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற தேவிந்தர் சிங் 12–வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 13 வீரர்கள் களம் இறங்கிய இறுதி சுற்றில் அவரால் 80.02 மீட்டர் தூரமே வீச முடிந்தது. தங்கம் வென்ற ஜெர்மனி வீரர் ஜோஹனஸ் வெட்டர் 89.89 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.


Next Story