துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 16 Aug 2017 10:15 PM GMT (Updated: 16 Aug 2017 9:04 PM GMT)

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் வருகிற 20-ந் தேதி நடக்கிறது.

* இந்த நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ரோகித் சர்மா பல்லகலேவில் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்திய அணிக்காக விளையாடுவது குறித்து மட்டுமே நான் சிந்தித்தேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான நான் தற்போது அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பதை பெரிய கவுரவமாக கருதுகிறேன். துணை கேப்டனாக களம் இறங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கை அணிக்கு எதிராக நான் நன்றாக விளையாடி இருக்கிறேன். அதேநேரத்தில் அந்த அணிக்கு எதிராக தடுமாறிய ஆட்டங்களையும் மறக்கவில்லை. டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி, இலங்கையை எளிதில் வென்றது. ஆனால் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இலங்கை அணி வலுவாக இருந்தது. அவர்கள் நமது அணியை எளிதில் தோற்கடித்தார்கள். அந்த ஆட்டத்தில் 320 ரன் இலக்கை இலங்கை அணி அச்சமின்றி தூரத்தி பிடித்தது குறிப்பிடத்தக்கது. நாங்கள் எங்களது பலத்துக்கு தகுந்தபடி சிறப்பாக விளையாட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

* 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்று இருக்கும் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. இந்த நிலையில் செரீனா வில்லியம்ஸ் அளித்த பேட்டியில், ‘அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாட வேண்டும் என்பது எனது இலக்காகும். ஆனால் குழந்தை பிறந்த 3 மாதத்தில் ஆடுகளம் திரும்புவது என்பது ஒரு மூர்க்கத்தனமான திட்டம் தான். கர்ப்பம் அடைந்து இருப்பதன் மூலம் எனக்கு புதிய சக்தி கிடைத்து இருப்பதாக நினைக்கிறேன். முன்பு போலவே களத்தில் கடும் சவால் அளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்று தெரிவித்தார்.

* இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகம் வெளிப்படையாக நடைபெற லோதா கமிட்டி அளித்த சிபாரிசுகளை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சில சிபாரிசுகளை ஏற்று இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கியமான சிபாரிசுகளை ஏற்காமல் தயக்கம் காட்டுவதுடன் இழுத்தடிப்பு செய்து வருகிறது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட இந்திய நிர்வாக கமிட்டி உறுப்பினர்களான வினோத்ராய், டியானா எடுல்ஜி ஆகியோர் 5-வது நிலை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘இந்திய கிரிக்கெட் வாரிய செயல் தலைவர் சி.கே.கண்ணா, செயலாளர் அமிதாப் சவுத்ரி, பொருளாளர் அனிருத் சவுத்ரி ஆகியோர் லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அதற்கு எதிராக நடந்து வருகிறார்கள். எனவே இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த அனுராக் தாகூர், செயலாளராக இருந்த அஜய் ஷிர்கே ஆகியோரை பதவியில் இருந்து நீக்கியது போல் இவர்களையும் நீக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

* இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் சேர்க்கப்படாததற்கு போதிய உடல்தகுதியுடன் இல்லாததே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்படும் சோதனையில், துரிதமாக ஓடுவது, உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிசோதித்து அதன் அடிப்படையில் புள்ளி வழங்கப்படுகிறது. இந்த வகையில் குறைந்தது 19.5 புள்ளிகள் எடுத்தால் மட்டுமே உடல்தகுதியுடன் இருப்பதாக அர்த்தம். ஆனால் யுவராஜ்சிங், உடல்தகுதி விஷயத்தில் 16 புள்ளிகள் மட்டுமே எடுத்ததால் கழற்றி விடப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story