ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்


ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

Image Courtesy: @badmintonphoto / @BAI_Media

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது.

பர்மிங்காம்,

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து (இந்தியா), ஜெர்மனியின் யுவோன் லியை சந்தித்தார்.

இதில் சிந்து 21-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது யுவோன் லி காயத்தால் விலகினார். இதனால் சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் 16-21, 11-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் பாய் யு போவிடம் பணிந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-14, 13-21, 13-21 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சு லீ யங்கிடம் தோற்று வெளியேறினார்.

இதற்கிடையே, நேற்று வெளியிடப்பட்ட உலக தரவரிசைப்பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் ஒரு இடம் சரிந்து 8-வது இடத்தில் உள்ளார். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான லக்ஷயா சென் ஒரு இடம் உயர்ந்து 18-வது இடத்தை பெற்றுள்ளார். ஸ்ரீகாந்த் 26-வது இடம் வகிக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 11-வது இடத்தில் உள்ளார். பெண்கள் இரட்டையர் பிரிவில் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணை 22-வது இடத்திலும், அஸ்வினி-தனிஷா கிரஸ்டோ ஜோடி 23-வது இடத்திலும் இருக்கின்றன.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 'நம்பர் ஒன்' இடத்தில் தொடருகிறது. ஏப்ரல் இறுதியில் உலக தரவரிசையில் டாப்-16 இடங்களுக்குள் இருப்பவர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story