இந்தியா– நியூசிலாந்து மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி புனேயில் இன்று தொடக்கம்


இந்தியா– நியூசிலாந்து மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி புனேயில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 2 Feb 2017 9:21 PM GMT (Updated: 2 Feb 2017 9:21 PM GMT)

இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி புனேயில் இன்று தொடங்குகிறது.

புனே,

இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி புனேயில் இன்று தொடங்குகிறது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய–ஓசியானியா குரூப்–1 பிரிவில் இந்தியா–நியூசிலாந்து இடையிலான ஆட்டம் மராட்டிய மாநிலம் புனேயில் இன்று முதல் 5–ந்தேதி வரை நடக்கிறது.

இந்திய மூத்த வீரர் லியாண்டர் பெயஸ் இரட்டையர் பிரிவில் தேசிய சாம்பியன் விஷ்ணு வர்தனுடன் இணைந்து ஆட இருக்கிறார். முதலில் விஷ்ணுக்கு பதில் சகெத் மைனெனி இடம் பிடித்திருந்தார். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் போது காலில் காயம் அடைந்த சகெத் மைனனி அதில் இருந்து முழுமையாக மீளாததால் கடைசி நேரத்தில் விஷ்ணு வர்தன் சேர்க்கப்பட்டார்.

இரட்டையரில் பெயஸ்– விஷ்ணு வர்தன் ஜோடி நியூசிலாந்தின் ஆர்டெம் சிடாக்– மைக்கேல் வீனஸ் இணையை நாளை எதிர்கொள்ள இருக்கிறது.

சாதனையை நோக்கி பெயஸ்

43 வயதான பெயஸ் புதிய சாதனையை நோக்கி அடியெடுத்து வைக்கிறார். இது அவர் பங்கேற்கும் 55–வது டேவிஸ் கோப்பை போட்டியாகும். இரட்டையரில் இதுவரை 42 வெற்றிகளை பெற்று இத்தாலியின் நிகோலா பியட்ராங்ஜெலியுடன் சமனில் இருக்கிறார். இன்னும் ஒரு வெற்றி பெற்றால், டேவிஸ் கோப்பை டென்னிஸ் வரலாற்றில் இரட்டையரில் அதிக வெற்றிகளை குவித்த வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி விடுவார்.

இன்றைய முதல் நாளில் ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி நியூசிலாந்தின் பின் டியர்னியுடனும், தமிழகத்தை சேர்ந்த ராம்குமார், நியூசிலாந்தின் ஜோஸ் ஸ்டாதமுடனும் மோத உள்ளனர். ஆனந்த் அமிர்தராஜ் விளையாடாத கேப்டனாக செயல்பட உள்ள கடைசி போட்டி இதுவாகும். ஆனந்த் அமிர்தராஜ் கூறும் போது, ‘நியூசிலாந்தின் இரட்டையர் அணி வலுவானது. அதே நேரத்தில் ஒற்றையர் பிரிவில் ஆடும் வீரர்களையும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கடைசியாக அவர்களுடன் மோதிய போது 1–2 என்று பின்தங்கி மீண்டு வந்ததை மறந்து விடக்கூடாது’ என்றார்.

டேவிஸ் கோப்பை டென்னிசில் நியூசிலாந்துக்கு எதிராக 8 போட்டித் தொடர்களில் விளையாடி அதில் 5–ல் இந்தியா வெற்றி கண்டுள்ளது. 1978–ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்றது இல்லை.


Next Story