இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: கால்இறுதியில் சானியா ஜோடி தோல்வி


இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: கால்இறுதியில் சானியா ஜோடி தோல்வி
x

இண்டியன்வெல்ஸ் டென்னிசில் இந்தியாவின் சானியா ஜோடி கால்இறுதியில் தோல்வி அடைந்தது.

இண்டியன்வெல்ஸ்,

பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5 முறை சாம்பியனான 2–ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7–5, 4–6, 6–1 என்ற செட் கணக்கில் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவை (அர்ஜென்டினா) வீழ்த்தி 4–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இண்டியன்வெல்ஸ் டென்னிசில் ஜோகோவிச் தொடர்ச்சியாக ருசித்த 19–வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் 43 ஆண்டு கால இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் வரலாற்றில் தொடர்ந்து அதிக வெற்றிகளை பெற்ற வீரர் (இதற்கு முன்பு பெடரர் 18 வெற்றி) என்ற சாதனையை ஜோகோவிச் படைத்தார்.

இதே போல் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 7–6 (3), 7–6 (4) என்ற நேர் செட்டில் ஸ்டீவ் ஜான்சனையும் (அமெரிக்கா), ஸ்பெயினின் ரபெல் நடால் 6–3, 7–5 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் வெர்டஸ்கோவையும் விரட்டினர்.

கெர்பர் அதிர்ச்சி

பெண்கள் ஒற்றையர் 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2–ம் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), தரவரிசையில் 15–வது இடத்தில் உள்ள எலினா வெஸ்னினாவை (ரஷியா) எதிர்கொண்டார். இதில் வெஸ்னினாவின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய கெர்பர் 3–6, 3–6 என்ற நேர் செட்டில் வீழ்ந்தார். இருப்பினும் அடுத்த வாரம் வெளியாகும் புதிய தரவரிசையில் கெர்பர் மீண்டும் முதலிடத்தை பிடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் அனஸ்டசியா பாவ்லிசென்கோவா (ரஷியா) 6–4, 3–6, 6–2 என்ற செட் கணக்கில் சுலோவக்கியாவின் சிபுல்கோவாவுக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார். கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), வோஸ்னியாக்கி (டென்மார்க்), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), குஸ்னெட்சோவா (ரஷியா) உள்ளிட்டோரும் தங்களது 4–வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

சானியா ஜோடி ‘அவுட்’

இதன் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி 4–6, 4–6 என்ற நேர் செட்டில் மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) யங் ஜான் சான் (சீனத்தைபே) இணையிடம் தோற்று வெளியேறியது.


Next Story