இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் குஸ்னெட்சோவா– வெஸ்னினா


இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் குஸ்னெட்சோவா– வெஸ்னினா
x
தினத்தந்தி 18 March 2017 9:43 PM GMT (Updated: 18 March 2017 9:43 PM GMT)

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில், பெண்கள் பிரிவில் ரஷியாவின் குஸ்னெட்சோவா– வெஸ்னினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில், பெண்கள் பிரிவில் ரஷியாவின் குஸ்னெட்சோவா– வெஸ்னினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

ரஷிய மங்கைகள்

பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் 8–ம் நிலை வீராங்கனை ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா (ரஷியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார்.

2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் குஸ்னெட்சோவா இரண்டு செட்டிலும் டைபிரேக்கர் வரை போராடி பிளிஸ்கோவாவின் சவாலுக்கு முடிவு கட்டினார். 7–6 (7–5), 7–6 (7–2) என்ற நேர் செட் கணக்கில் குஸ்னெட்சோவா வெற்றி பெற்று 3–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

மற்றொரு அரைஇறுதியில் எலினா வெஸ்னினா (ரஷியா) 6–3, 6–4 என்ற நேர் செட்டில் கிறிஸ்டினா மிலாடெனோவிச்சை (பிரான்ஸ்) வீழ்த்தி முதல் முறையாக இறுதி சுற்றை எட்டினார். மகுடத்துக்கான ஆட்டத்தில் வெஸ்னினா– குஸ்னெட்சோவா மோதுகிறார்கள். இண்டியன்வெல்ஸ் டென்னிசின் இறுதி ஆட்டத்தில் இரண்டு ரஷிய வீராங்கனைகள் சந்திப்பது 2006–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

நிஷிகோரி தோல்வி

ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் அமெரிக்காவின் ஜாக் சோக் 6–3, 2–6, 6–2 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நிஷிகோரிக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை உறுதி செய்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) எதிர்த்து ஆட இருந்த ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியாஸ் உடல்நலக்குறைவால் திடீரென விலகினார். இதனால் பெடரர் விளையாடாமலேயே அரைஇறுதிக்கு முன்னேறினார்.

அரைஇறுதி ஆட்டங்களில் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து)– பாப்லோ காரெனோ பஸ்தா (ஸ்பெயின்), பெடரர்– ஜாக் சோக் ஆகியோர் மோதுகிறார்கள்.


Next Story