பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் வாவ்ரிங்கா-நடால் முர்ரே, டொமினிக் தோல்வி


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் வாவ்ரிங்கா-நடால் முர்ரே, டொமினிக் தோல்வி
x
தினத்தந்தி 9 Jun 2017 9:00 PM GMT (Updated: 9 Jun 2017 9:00 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, ஸ்பெயினின் ரபெல் நடால் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, ஸ்பெயினின் ரபெல் நடால் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். ஆன்டி முர்ரே, டொமினிக் திம் தோற்று வெளியேறினர்.

பிரெஞ்ச் ஓபன்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவும், ஒலிம்பிக் சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவும் நேற்று கோதாவில் இறங்கினர்.

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் நீயா-நானா? என்று கடுமையாக மோதிக்கொண்டதால் களத்தில் அனல் பறந்தது. முதல் 4 செட்டுகளை இருவரும் தலா 2 வீதம் வென்றதையடுத்து, ஆட்டம் 5-வது செட்டுக்கு நகர்ந்தது.

இறுதிப்போட்டியில் வாவ்ரிங்கா


கடைசி செட்டில் தொடக்கத்தில் இருந்தே வாவ்ரிங்காவின் கை ஓங்கியது. முர்ரேவின் மூன்று சர்வீஸ்களை முறியடித்த வாவ்ரிங்கா, அவரது சவாலுக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்தார். 4 மணி 34 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான இந்த மோதலில் வாவ்ரிங்கா 6-7 (6-8), 6-3, 5-7, 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் முர்ரேவை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு புள்ளிகளை தாரைவார்க்கும் தானாக செய்யக்கூடிய தவறுகளை எதிராளியை விட வாவ்ரிங்கா (77 முறை) ஒரு மடங்கு அதிகமாக இழைத்தாலும், அவரது அதிரடியான ஷாட்டுகள் வெற்றிக்கு துணை நின்றது. இதன் மூலம் 1973-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனில் அதிக வயதில் இறுதி சுற்றை எட்டிய வீரர் என்ற சிறப்பை 32 வயதான வாவ்ரிங்கா பெற்றார். கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் அரைஇறுதியில் இதே முர்ரேவிடம் தான் வாவ்ரிங்கா தோற்று இருந்தார். அதற்கு இப்போது பழிதீர்த்துக் கொண்டார்.

நடால் கலக்கல்

மற்றொரு அரைஇறுதியில் 9 முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-3, 6-4, 6-0 என்ற நேர் செட்டில் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) பந்தாடினார்.

2015-ம் ஆண்டு சாம்பியனான வாவ்ரிங்கா இறுதி ஆட்டத்தில் ரபெல் நடாலுடன் நாளை மோதுகிறார்.

Next Story