பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: லாத்வியா வீராங்கனை ஆஸ்டாபென்கோ சாம்பியன்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: லாத்வியா வீராங்கனை ஆஸ்டாபென்கோ சாம்பியன்
x
தினத்தந்தி 10 Jun 2017 8:56 PM GMT (Updated: 10 Jun 2017 8:55 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி லாத்வியா வீராங்கனை ஆஸ்டாபென்கோ சாம்பியன் பட்டத்தை அறுவடை செய்தார்.

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி லாத்வியா வீராங்கனை ஆஸ்டாபென்கோ சாம்பியன் பட்டத்தை அறுவடை செய்தார்.

பிரெஞ்ச் ஓபன்

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 4–ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), 47–ம் நிலை வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோவும் (லாத்வியா) மோதினர்.

அனுபவம் வாய்ந்த ஹாலெப்பே வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் முடிவு அதற்கு நேர்மாறாக அமைந்தது.

தொடக்க செட்டில் முதல் 8 கேம்களில் இருவரும் தலா 2 சர்வீஸ்களை முறியடித்து 4–4 என்று சமநிலையில் இருந்தனர். இருப்பினும் ஆஸ்டாபென்கோ பந்தை அடிக்கடி வெளியே அடித்து நிறைய தவறுகளை இழைத்தார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஹாலெப் 10–வது கேமில் அவரது சர்வீசை தகர்த்து முதல் செட்டை வசப்படுத்தினார்.

ஆஸ்டாபென்கோ சாம்பியன்

இரண்டாவது செட்டில் தொடக்கத்தில் ஹாலெப் 3–0 என்று முன்னிலையுடன் வீறுநடை போட்டார். அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு விசுவரூபம் எடுத்த ஆஸ்டாபென்கோ இந்த செட்டை கைப்பற்றி பதிலடி கொடுத்தார். கடைசி செட்டிலும் ஆரம்பத்தில் முன்னிலை வகித்த (3–1) ஹாலெப் அதன் பிறகு ‘பிடி’யை நழுவ விட்டார். ஆஸ்டாபென்கோவின் வலுவான ஷாட்டுகளை ஹாலெப்பால் சமாளிக்க முடியவில்லை.

2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் 20 வயதான ஆஸ்டாபென்கோ 4–6, 6–4, 6–3 என்ற செட் கணக்கில் ஹாலெப்பை தோற்கடித்து முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை சொந்தமாக்கினார். லாத்வியா நாட்டவர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும். ‘‘20 வயதிலேயே சாம்பியன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை’’ என்று ஆஸ்டாபென்கோ உணர்ச்சிபெருக்குடன் கூறினார்.

ரூ.15 கோடி பரிசு

கிராண்ட்ஸ்லாமில் டாப்– 32 வீரர், வீராங்கனைகளுக்கு போட்டித்தரவரிசை என்று தனியாக வழங்கப்படும். ஆஸ்டாபென்கோவுக்கு அத்தகைய தரவரிசை கிடைக்கவில்லை. இவ்வாறு போட்டித்தரவரிசையில் இடம் பெறாத ஒரு வீராங்கனை பிரெஞ்ச் ஓபனை ருசிப்பது 1933–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்டாபென்கோவுக்கு ரூ.15 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. வெற்றியின் மூலம் அவர் தரவரிசையில் 12–வது இடத்துக்கு முன்னேறுகிறார்.

25 வயதான ஹாலெப், பட்டத்தை வென்று இருந்தால் முதல் முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்திருப்பார். தோற்றதால் தரவரிசையில் 2–வது இடத்தை பெறுகிறார். அவருக்கு ரூ7¼ கோடி பரிசாக வழங்கப்பட்டது.


Next Story