வாவ்ரிங்காவை பந்தாடினார்: 10–வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்று நடால் சாதனை


வாவ்ரிங்காவை பந்தாடினார்: 10–வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்று நடால் சாதனை
x
தினத்தந்தி 11 Jun 2017 8:41 PM GMT (Updated: 11 Jun 2017 8:41 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் வாவ்ரிங்காவை நேர் செட்டில் பந்தாடிய ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 10–வது முறையாக பட்டத்தை வென்று பிரமிப்பூட்டினார்.

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் வாவ்ரிங்காவை நேர் செட்டில் பந்தாடிய ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 10–வது முறையாக பட்டத்தை வென்று பிரமிப்பூட்டினார்.

நடால் சாம்பியன்

பாரீசில் நடந்து வந்த ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று முடிவுக்கு வந்தது. கடைசி நாளில் நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 4–ம் நிலை வீரர் ரபெல் நடாலும் (ஸ்பெயின்), தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள வாவ்ரிங்காவும் (சுவிட்சர்லாந்து) மோதினர். ‘களிமண்’ தரையில் நடக்கும் போட்டிகளில் ‘சகலகலா வல்லவன்’ என்பதை நடால் மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டினார்.

ஆக்ரோ‌ஷமான சர்வீஸ், மின்னல்வேக ஷாட்டுகள் மூலம் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய நடால், எதிராளியின் பிடி எந்த தருணத்திலும் ஓங்க விடாமல் பார்த்துக் கொண்டார். ஒரு தரப்பாக அமைந்த இந்த ஆட்டத்தில் நடால் 6–2, 6–3, 6–1 என்ற நேர் செட்டில் முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்காவை துவம்சம் செய்து பட்டத்தை சொந்தமாக்கினார். 2014–ம் ஆண்டுக்கு பிறகு அவர் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் இதுவாகும். வெற்றியை பெற அவருக்கு 2 மணி 5 நிமிடங்கள் தேவைப்பட்டது. இந்த தொடரில் நடால் ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

10–வது முறையாக...

31 வயதான ரபெல் நடால் பிரெஞ்ச் ஓபனை உச்சிமுகர்வது இது 10–வது முறையாகும். ஏற்கனவே இங்கு 2005–2008, 2010–2014 ஆகிய ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருக்கிறார். இதன் மூலம் குறிப்பிட்ட கிராண்ட்ஸ்லாமை 10 முறை ருசித்த முதல் வீரர் என்ற சரித்திர சாதனையை படைத்தார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் 2–வது நபர் ஆவார். ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட் ஆஸ்திரேலிய ஓபனை 11 முறை வென்று இருப்பது நினைவு கூரத்தக்கது.

வாகை சூடிய ரபெல் நடாலுக்கு ரூ.15 கோடியும், 2–வது இடத்தை பிடித்த வாவ்ரிங்காவுக்கு ரூ.7¼ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்கள் யார்–யார்?

ஆண்கள் ஒற்றையரில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் வரிசையில் அமெரிக்க ஜாம்பவான் பீட்சாம்ப்ராசுடன் 2–வது இடத்தை பகிர்ந்து இருந்த ரபெல் நடால் இப்போது அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு தனியாக 2–வது இடத்தை பிடித்துள்ளார். நடால் இதுவரை 15 கிராண்ட்ஸ்லாம் (ஆஸ்திரேலிய ஓபன்–1, பிரெஞ்ச் ஓபன்–10, விம்பிள்டன்–2, அமெரிக்க ஓபன்–2) பட்டம் கைப்பற்றி இருக்கிறார்.

அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற டாப்–5 வீரர்கள் விவரம் வருமாறு:–

1. பெடரர் (சுவிட்சர்லாந்து)–18

2. நடால் (ஸ்பெயின்)–15

3. சாம்ப்ராஸ் (அமெரிக்கா)–14

4. ராய் எமர்சன் (ஆஸ்திரேலியா)–12

5.ஜோகோவிச் (செர்பியா)–12


Next Story