மெக்கன்ரோ விமர்சனத்துக்கு செரீனா வில்லியம்ஸ் பதிலடி


மெக்கன்ரோ விமர்சனத்துக்கு செரீனா வில்லியம்ஸ் பதிலடி
x
தினத்தந்தி 27 Jun 2017 9:45 PM GMT (Updated: 27 Jun 2017 8:34 PM GMT)

தற்போது உலக தர வரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான 35 வயது அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் குறித்து விமர்சித்து இருந்தார்.

நியூயார்க்,

அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் பிரபல டென்னிஸ் வீரரான ஜான் மெக்கன்ரோ சில தினங்களுக்கு முன்பு 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்று சாதனை படைத்தவரும், தற்போது உலக தர வரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான 35 வயது அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் குறித்து விமர்சித்து இருந்தார். இது குறித்து அமெரிக்க வானொலிக்கு ஜான் மெக்கன்ரோ அளித்த பேட்டியில், ‘பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் மிகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனை என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அதேநேரத்தில் அவரை ஒட்டுமொத்தத்தில் சிறந்த வீராங்கனை என்று சொல்ல முடியாது. அவர் ஆண்கள் பிரிவில் விளையாட நேர்ந்து இருந்தால் கதையே வேறுமாதிரியாக இருந்து இருக்கும். ஆண்கள் பிரிவில் ஆடினால் செரீனா வில்லியம்ஸ் உலக தர வரிசையில் 700-வது இடத்தையே பிடிப்பார். செரீனா வில்லியம்ஸ் வியப்புக்குரிய வீராங்கனை என்று நான் நினைக்கவில்லை’ என்று தெரிவித்து இருந்தார். செரீனாவை மட்டம் தட்டும் வகையில் மெக்கன்ரோ அளித்த பேட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் மெக்கன்ரோவின் விமர்சனத்துக்கு முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் டுவிட்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், ‘உங்களை நான் மிகவும் மதிக்கிறேன். உண்மைக்கு புறம்பாக இதுபோன்ற அறிக்கை விடுவதில் இருந்து நீங்கள் விலகி இருங்கள். நீங்கள் சொல்லும் தர வரிசையில் உள்ளவர்களுடன் நான் ஒருபோதும் விளையாடியது கிடையாது. அதற்கு எனக்கு நேரமும் இல்லை. எனக்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பதால் என்னையும் எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் மதியுங்கள். நல்ல நாளாக அமையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

செரீனா வில்லியம்ஸ் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் ஒற்றையர் பட்டத்தை வென்று அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்தார். அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் கர்ப்பத்துடன் ஆடி வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story