சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா ‘சாம்பியன்’


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 21 Aug 2017 11:30 PM GMT (Updated: 21 Aug 2017 8:06 PM GMT)

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சின்சினாட்டி,

அமெரிக்கா ஓபன் போட்டி முன்னோட்டமாக நடத்தப்படும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் விம்பிள்டன் சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப்பை (ருமேனியா) எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கார்பின் முகுருஜா 6-1, 6-0 என்ற நேர்செட்டில் எளிதில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். முகுருஜா வெற்றி பெற்றதால் பிளிஸ்கோவா (செக்குடியரசு) முதலிடத்தில் தொடருகிறார். தோல்வி கண்டதால் சிமோனா ஹாலெப்பின் நம்பர் ஒன் தரவரிசை கனவு கலைந்தது. அவர் 2-வது இடத்தில் தொடருகிறார். கார்பின் முகுருஜா ஒரு இடம் ஏற்றம் கண்டு 3-வது இடத்தை பெற்றுள்ளார். முகுருஜா வென்ற 5-வது பட்டம் இதுவாகும்.

டிமிட்ரோவ் ‘சாம்பியன்’

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் டிமிட்ரோவ் (பல்கேரியா)-நிக் கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார் கள். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் டிமிட்ரோவ் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் நிக் கிர்கியோசை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
இந்த நிலையில் நேற்று வெளியிடப்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவு உலக தர வரிசையில், சின்சினாட்டி கால்இறுதியில் தோல்வி கண்ட ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ஒரு இடம் சறுக்கி 2-வது இடத்தை பெற்றுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற டிமிட்ரோவ் 2 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

நிக் கிர்ஜியோஸ் முன்னேற்றம்

அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 5 இடம் முன்னேறி 14-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸ் 5 இடம் ஏற்றம் கண்டு 18-வது இடத்தையும், ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் 6 இடங்கள் உயர்ந்து 25-வது இடத்தையும், குரோஷியா வீரர் கார்லோவிச் 6 இடம் முன்னேறி 38-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Next Story