மான்டி கார்லோ டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி


மான்டி கார்லோ டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி
x

சுமித் நாகல் (image courtesy: ATP Tour Instagram via ANI)

சுமித் நாகல் 2-வது சுற்றில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஹோல்கர் ருனேவை எதிர்கொள்கிறார்.

மான்டி கார்லோ,

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 93-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், 38-ம் நிலை வீரர் மேட்டியோ அர்னால்டியை (இத்தாலி) சந்தித்தார். 2 மணி 37 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அர்னால்டிக்கு அதிர்ச்சி அளித்தார்.

டாப்-50க்குள் இருக்கும் வீரர்களை நாகல் வீழ்த்துவது இது 3-வது முறையாகும். அத்துடன் ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் போட்டியில் களிமண் தரையில், வெற்றியை ருசித்த முதல் இந்திய வீரர் (ஒற்றையர் பிரிவு) என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்குள் நுழைந்த 26 வயதான சுமித் நாகல், மான்டி கார்லோ போட்டிக்கு 42 ஆண்டுக்கு பிறகு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

சுமித் நாகல் 2-வது சுற்றில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஹோல்கர் ருனேவை (டென்மார்க்) எதிர்கொள்கிறார். மற்ற ஆட்டங்களில் அலியாசிம் (கனடா), பிரான்சிஸ்கோ செருன்டோலா (அர்ஜென்டினா), அலெக்சி பாப்ரின் (ஆஸ்திரேலியா) உள்ளிட்டோர் வெற்றி கண்டனர். தரவரிசையில் டாப்-4 இடங்கள் வகிக்கும் ஜோகோவிச் (செர்பியா), ஜானிக் சினெர் (இத்தாலி), அல்காரஸ் (ஸ்பெயின்), மெட்விடேவ் (ரஷியா) ஆகியோர் நேரடியாக 2-வது சுற்றில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story