முனிவர்களின் ஆணவத்தை அடக்கிய இறைவன்


முனிவர்களின் ஆணவத்தை அடக்கிய இறைவன்
x
தினத்தந்தி 9 April 2024 6:08 AM GMT (Updated: 9 April 2024 9:45 AM GMT)

திருப்பராய்த்துறை கோவிலில் உள்ள உள் கோபுரம் ஏழு நிலைகளை உடையது. கோவிலின் இடப்புறம் திருக்குளம் அமைந்து உள்ளது.

கங்கையை விட புனிதமான காவிரி என்று போற்றப்படும் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோவில். பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதாலும், காவிரி துறையில் இருப்பதாலும் பராய்த்துறை எனப் பெயர் பெற்றது. அருள்மிகு பராய்த்துறை நாதர் திருக்கோவிலுக்கு அருகில் காவிரி அகண்ட காவிரியாக ஓடுகிறது. காவிரியாற்றின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற 127 திருத்தலங்களில் திருப்பராய்த்துறை குறிப்பிடத்தக்க திருத்தலமாகும்.

இத்தலத்தில் பராய் மரமே தல விருட்சமாகும். பராய் மரப்பட்டைகள் மருந்தாக பயன்படுபவை. பராய் மரம் வடமொழியில் "தாருகா விருட்சம்" என்று அழைக்கப்படுவதால் இத்தலம் "தாருகா வனம்"என்றும் அழைக்கப்படுகிறது.

தல புராணம்

இந்தத் தலத்தில் தவம் செய்த முனிவர்கள், கடவுளை பற்றிய சிந்தனை இல்லாமல் கடமையை செய்வதே போதுமானது என்று எண்ணி வாழ்ந்தனர். இதனால் இவர்களுக்கு அகந்தை (ஆணவம்) வளர்ந்தது. இவர்களை தடுத்தாட்கொள்ள நினைத்த சிவபெருமான், பேரழகு பிழம்பாக பிச்சை ஏற்கும் பிச்சாடனர் கோலத்தில் அவர்கள் வீட்டு வாசலில் நின்றார். அன்பு பிச்சை ஏற்று அருட்பிச்சை போடும் அப்பனை முனிவர்கள் உணரவில்லை.

எண்ணாயிர மாண்டு யோகம் இருப்பினும்

கண்ணார் அமுதனை கலந்தறிவார் இல்லை

என்ற திருமந்திர கூற்றுப்படி வாயிலில் நிற்கும் இறைவனை கலந்தறியும் பேறு அவர்களுக்கு கிடைக்கவில்லை.

முனிவர்களின் மனைவிமார் இறைவனுடைய பிச்சாடனர் கோலத்தில் மயங்கினர். தன்னை மறந்து தன் நாமம் கேட்டு தலைவன் பின்னால் செல்ல தொடங்கினர். இதையறிந்த முனிவர்கள் பிச்சாடன மூர்த்தியை அழிக்க அபிசார வேள்வி என்ற யாகம் செய்தனர். யாகத்தில் தோன்றிய புலியை இறைவன் மேல் ஏவினர். அவர் புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக கட்டிக் கொண்டார். அவருடைய பொன்னார் திருமேனிக்கு புலித்தோல் ஆடை மிக பொருத்தமாக இருந்தது.

இதனால் முனிவர்கள் மானை ஏவினர். இறைவன் அதை அடக்கி தனது இடக்கரத்தில் ஏந்திக் கொண்டார். பெண் மானாகிய உமாதேவிக்கு இடம் கொடுத்தவர் இந்த மானுக்கும் இடம் கொடுத்தார். முனிவர்கள் பாம்புகளை ஏவினர். சிவபெருமான் அவற்றை தனக்குரிய அணிகலன்களாக மாற்றி இடுப்பிலும், கழுத்திலும் ஏற்றுக் கொண்டார்.

சிவபெருமான் திருவருளால் மயிலாகிய அம்பிகைக்கு அருகில் பாம்புகளும் இருக்கும் பக்குவம் பெற்றன. அதன் பின்னர் முனிவர்கள் பூதகணங்களை ஏவினர். பெருமான் அவற்றை தனது படையில் சேர்த்துக் கொண்டார். காட்டில் தனியாக ஆடும் கடவுளோடு ஆட பூதங்களும் பழகிக்கொண்டன. இறுதியாக மிகப்பெரிய யானையை ஏவினர். இறைவன் அந்த யானையின் தோலை உரித்து போர்த்திக் கொண்டு கரியுரி போர்த்த செஞ்சேவகனாக காட்சியளித்தார்.

பகையாக வந்தவை அனைத்தும் உறவாயின. யானையும், புலியும் எம்பெருமான் திருவடி பேறு பெற்றன. இதன் பிறகுதான் முனிவர்களின் ஆணவம் அடங்கியது. பக்தி கண்களால் பரமனை தேடினர். இறைவன் தாருகாவனேஸ்வரராக காட்சியளித்து தருக்குற்ற முனிவர் செருக்கை மாற்றி தடுத்தாட்கொண்டார். இந்த தலத்தில் இது நிகழ்ந்தது.

பராய்த்துறை நாதர் பாடல் பெற்றவர். இதில் வியப்பில்லை. ஆனால் அந்த பராய் மர பட்டையும் திருவாசக பாடல் பெற்றது என்பது மிக சிறப்பல்லவா? திருவாசகத்தில் 'செத்திலாப் பத்து' என்ற தலைப்பில் நான்காவது பாடலில் இறைவனை நோக்கி மாணிக்கவாசகர் கேட்கிறார். திருவாசக பெருமானே! உன்னருள் பெறுவதற்காக அருந்தவம் புரியும் அன்பர்களும், நான்முகனும், திருமாலும், தீயிடைப்பட்ட மெழுகுபோல உன்னை நினைத்து, உருகும் சான்றோர்களும் காத்து கிடக்கிறார்கள். அவர்களை விட்டு விட்டு ஒன்றும் போதா என்னை ஆட்கொண்டாயே! இது என்ன விந்தை! என் மனம் பராய் மர கட்டை போல் வலுவானது. என் கண் மரம் போன்றது. என் காது இரும்பை விட வலுவானது. தென்பராய்த்துறை பெருமானே! என் செயல் வியக்கத்தக்கதல்லவா என்கிறார்.

'அன்பர் ஆகிமற்று அருந்தவம் முயல்வார்

அயனும் மாலும் மற்று அழலுறு மெழுகாம்

என்பராய் நினைவார் எனைப்பலர்

நிற்க இங்கெனை எற்றினுக்கு ஆண்டாய்?

வன்பராய் முருடு ஒக்குமென் சிந்தை:

மரக்கண்; என்செவி இரும்பினும் வலிது

தென்பராய்த் துறையைய் சிவலோகா!

திருப்பெருந்துறை மேவிய சிவனே'

என்பது திருவாசகம். மரத்தையும் பாடி இடத்தையும் பாடுகிறார் மாணிக்கவாசகர். தென்பராய்த்துறை சிவலோகம் எனப்பொருள் கொள்ளுமாறு பாடி இருப்பது அறிந்து இன்புறத்தக்கது.

இத்தலத்தில் உள்ள இறைவியின் திருநாமம் பசும்பொன் மயிலாம்பாள். வடமொழியில் ஹேமவர்ணாம்பிகை என்று அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கி அன்னை எழுந்தருளியிருக்கிறார். மானை தாங்கிய பெருமான் இந்த மயிலை தாங்கி வளம் அருள்கிறார். முன் மண்டப வாயிலில் சுதையால் ஆன ரிஷபாரூடர் அருள்பொழியும் முகத்தோடு காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் உள்ள உள் கோபுரம் ஏழு நிலைகளை உடையது. இடப்புறம் திருக்குளம் அமைந்து உள்ளது. வலப்புறம் வசந்த மண்டபம் உள்ளது.

மூலவர் அழகான திருமேனியோடு கிழக்கு நோக்கிய சன்னிதியில் காட்சியளிக்கிறார். உள் சுற்றில் வலம்புரி விநாயகர், சப்த கன்னியர், 63 நாயன்மார்கள், சோமாஸ்கந்தர், மகாகணபதி, பஞ்சலிங்கம், ஆறுமுகர், பிச்சாடனர், பிரம்மா, துர்க்கை, கஜலெட்சுமி, சண்முகர் சன்னிதிகள் உள்ளன. நவக்கிரகங்களில் சனீஸ்வரர் மட்டும் காக்கை வாகனத்தோடு காட்சியளிக்கிறார்.

சிவனை எழுதி பார்த்தது தேவாரம். சிவனே எழுதி பார்த்தது திருவாசகம். இந்த இரண்டிலும் பாடல் பெற்ற திருத்தலம் திருப்பராய்த்துறை. இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற திருத்தலம் இது. இங்குள்ள இறைவன் சுயம்புலிங்கமாக காட்சி அளிக்கிறார்.

திருச்சி-கரூர் சாலையில் திருச்சியில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்து உள்ளது. திருச்சியில் இருந்து கரூர், குளித்தலை செல்லும் பஸ்களில் ஏறி கோவிலுக்கு செல்லலாம். திருச்சி-ஈரோடு ரெயில் பாதையில் எளமனூர் ரெயில் நிலையத்தில் இறங்கியும் கோவிலுக்கு செல்லலாம்.

துலாஸ்நான திருவிழா

ஆண்டு தோறும் இங்கு வைகாசி மாதம் பிரம்மோற்சவம் 12 நாட்கள் நடக்கிறது. இந்த உற்சவத்தில் ஐந்தாம் நாள் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ஆறாம் நாள் திருக்கல்யாணம், ஒன்பதாம் நாள் திருத்தேர், பத்தாம் நாள் தீர்த்தவாரி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 18-ம் நாள் காலையில் கதிரவனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகின்றன. இது சூரிய வழிபாடு எனப்படுகிறது.

ஐப்பசி முதல் நாள் துலாஸ்நான திருவிழா மிக சிறப்பாக நடக்கிறது. இது முதல் முழுக்கு எனப்படும். அதிகாலையில் அம்மையும், அப்பனும் எழுந்தருளி திருவீதியுலாவாக காவிரிக்கு வந்து தீர்த்தம் கொடுப்பர். அஸ்திர தேவர் காவிரியில் திருமுழுக்காடுவார். அதன் பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் காவிரியில் நீராடுவார்கள். முதல் முழுக்கு திருப்பராய்த்துறையிலும், ஐப்பசி மாதம் கடைசி நாளில் கடைமுழுக்கு மயிலாடுதுறையிலும் நடக்கும்.


Next Story