தருமபுரம் ஞானபுரீசுவரர் கோவிலில் கொடியேற்ற விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஞானபுரீசுவரர் கோவில் பெருவிழா இன்று முதல் 30-ம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது.

Update: 2024-05-20 11:12 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேச விழா நடைபெற உள்ளதையொட்டி, ஞானபுரீசுவரர் கோவில் பெருவிழா கொடியேற்றம் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சாமிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் அமைந்துள்ள ஞானாம்பிகை உடனான ஞானபுரீசுவரர் கோவில் பெருவிழா இன்று முதல் மே 30-ம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவில், ஞானாம்பிகை சமேத ஞானபுரீசுவரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் கோவில் கொடிமரத்தின் முன்பு எழுந்தருளச் செய்யப்பட்டனர். அங்கு, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சாமிகள் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரிஷபக் கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், ஆதீனக் கட்டளைகள் திருநாவுக்கரசு தம்பிரான், திருஞானசம்பந்தர் தம்பிரான், மாணிக்கவாசக தம்பிரான், சொக்கலிங்க தம்பிரான் உள்ளிட்ட தம்பிரான் சாமிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில், தினசரி சாமி வீதியுலாவும், மே 23-ம் தேதி யானைமீது திருமுறை பெட்டகம் வைத்து வீதியுலா, மே 24-ம் தேதி சகோபுர தரிசனம், மே 26-ம் தேதி திருஞானசம்பந்தர் குருபூஜை விழா, மே 28-ம் தேதி காலை 8 மணிக்கு தேர் உற்சவமும் நடைபெறவுள்ளது. மே 29-ம் தேதி சபாநாயகர் தீர்த்தம் கொடுக்கும் உற்சவம், மே 30-ம் தேதி ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லும் பட்டண பிரவேசம் நடைபெறும். மே 31-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்று ஜூன் 1-ம் தேதி பஞ்சமூர்த்திகள் யதாஸ்தானம் எழுந்தருளல் நடைபெறவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்