ஒரே நாளில் 450 டன் குப்பை அகற்றம்


ஒரே நாளில் 450 டன் குப்பை அகற்றம்
x

புதுவையில் இன்று ஒரே நாளில் 450 டன் குப்பை அகற்றப்பட்டன.

ஆயுத பூஜை

நாடு முழுவதும் நேற்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. ஆயுத பூஜையை யொட்டி வீடுகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். அப்போது நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களில் உள்ள எந்திரங்கள் மற்றும் வாகனங்களுக்கு மாலையிட்டு வாழை மரங்கள், வாழைகன்றுகளை கட்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

ஆயுத பூஜை முடிந்த நிலையில் விற்பனை செய்யாமல் மீதம் இருந்த வாழைக்கன்று, பூக்களை வியாபாரிகள் சாலையோரம் கொட்டி சென்றனர். வீடுகள் மற்றும் நிறுவனங்களில் கட்டி வைக்கப்பட்டு இருந்த வாழைகன்றுகளும் குப்பை தொட்டிகளில் வீசினர்.

450 டன் அகற்றம்

இதேபோல் திருஷ்டி சுற்றிய வெண் பூசணிக்காய்களையும் பொதுமக்கள் சாலைகளில் போட்டு உடைத்தனர். மேலும் வீடுகளை சுத்தப்படுத்தி தேவையில்லாத பொருட்களையும் தெருக்களில் தூக்கி போட்டனர்.

இதனால் புதுவை தெருக்களில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடந்தது. நகராட்சி சார்பில் வைக்கப்பட்டு இருக்கும் குப்பை தொட்டிகளும் நிரம்பி வழிந்தன.

நகராட்சி ஊழியர்கள், தனியார் ஒப்பந்த ஊழியர்கள் இணைந்து விடிய விடிய துப்புரவு பணி மேற்கொண்டனர். நேற்று ஒரே நாளில் புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 220 டன் குப்பையும், உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 230 டன் குப்பையும் என மொத்தம் 450 டன் குப்பை அகற்றப்பட்டன.


Next Story