இட நெருக்கடியில் செயல்படும் பஸ் நிலையம்


இட நெருக்கடியில் செயல்படும் பஸ் நிலையம்
x

புதுச்சேரி புதிய பஸ்நிலையம் மேம்பாட்டு பணியால் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தற்காலிக பஸ் நிலையங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதுச்சேரி

புதுவை புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி செலவில் மேம்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது.

முதல்கட்டமாக பஸ் நிலையத்தின் மையப்பகுதியில் கடைகள், அலுவலகங்கள் அடங்கிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்காக அங்கு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் புதுவை பஸ் நிலையத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பயணிகள் அவதி

இதனால் பெரும்பாலும் பஸ் நிலையத்துக்குள் வராமலேயே வெளியே நின்று பயணிகளை பஸ்கள் ஏற்றி செல்கின்றன. இதனால் பயணிகள் அவதியடைகின்றனர்.

பணிகள் தொடங்கும்போது இதுபோன்ற சிரமம் ஏற்பட்டால் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்து கழக பணிமனை ஆகியவற்றில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முன்னேற்றம் இல்லை

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்க அளவீடு செய்யும் பணி நடந்தது. அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்தநிலையில் தற்போது தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் கழிவறைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கிருந்து விரைவு பஸ்களையும், கடலூர் மார்க்கமாக செல்லும் பஸ்களையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story