.
சற்று முன் :
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A
ஏப்ரல் 22 | 07:50 pm
23.4.2014 (புதன்கிழமை)

47  ஆண்டுகள்  பொறுத்தோம்,
தேர்தல்  முடியும்வரை  காத்து  இருக்கலாமே!

இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இன்றுவரை மக்களின் கடும் வெறுப்பை சம்பாதித்து இருப்பது ஊழல்தான். ஊழல் இல்லாத நாடாக விளங்கவேண்டும் என்பதுதான் சுதந்திரம் வாங்கித்தந்த தலைவர்களின் கனவாகும். அந்த வகையில் ஊழல் செய்யாத அரசியல் தலைவர்களைத்தான் மக்களும் அவர்கள் மறைந்த பின்னரும் போற்றுகிறார்கள், புகழுகிறார்கள். அப்பழுக்கற்ற அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும் என்ற வகையில்தான் அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும் லஞ்ச லாவண்யமற்ற வகையில் தங்கள் பணியை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதைமீறி லஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலுவான அமைப்பு வேண்டும், அந்த அமைப்பின் கழுகு கண் பார்வையில் இருந்து யாரும் தப்பக்கூடாது என்பதுதான் நல்லோருடைய ஆசையாக இருந்தது. இதற்காக லோக்பால் அமைப்பு ஒன்று தொடங்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் 47 ஆண்டுகளுக்கு முன்பாக லோக்பால் அமைப்பு தொடங்குவதற்கு விதை விதைக்கப்பட்டது. ஆனால் அந்த விதை முளைக்கவில்லை. கிளம்பிற்று காண் விடிவெள்ளி என்பது போல ஊழல் ஒழிப்பு ஆயுதத்தை கையில் எடுத்துக்கொண்டு அன்னா ஹசாரே கிளம்பினார். ஊழலை வெறுக்கும் மக்கள் பட்டாளம் அவருக்கு பின்னால் அணிவகுத்தது. மக்களின் எழுச்சியை கண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் சரி, மற்ற அரசியல் கட்சிகளும் சரி வேறு வழியில்லாமல் அடி பணிந்து லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த சட்டப்படி மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பும் ஊழலுக்கு எதிரான போரைத் தொடுக்கும், ஊழல்வாதிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும். பிரதமர் முதல் மத்திய மந்திரிகள், மூத்த அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என்று யாரும் லோக்பால் அமைப்பின் வலையில் இருந்து தப்பமுடியாது. லோக்பால் அமைப்பு என்பது ஒரு தலைவர் மற்றும் அதிகபட்சமாக 8 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி மற்றும் சீர்மிகு சட்ட வல்லுனர் கொண்ட குழுதான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்போது பாராளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. 9 கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தலில் 5 கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டது. 6–வது கட்ட தேர்தல் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் நாளை நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் அரசாங்கம் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது. அதனால்தான் தமிழ்நாட்டுக்கே பெருமை தேடித்தரும் வகையில் போலீஸ் டி.ஜி.பி அர்ச்சனா ராமசுந்தரம் சி.பி.ஐ.யின் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டும், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் பிரஜ் கிஷோர் பிரசாத் மத்திய உள்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டும் அவர்களை தேர்தல் முடியும் வரை  பணியில் இருந்து விடுவிக்காமல் தமிழக அரசு இருக்கிறது. ஆனால் இப்போது திடீரென்று லோக்பால் தேர்வு கமிட்டி கூட்டத்தை பிரதமர் 27, 28–ந்தேதிகளில் கூட்டியிருக்கிறார். தேர்தலுக்கு பிறகு இப்போது உள்ள பிரதமர் மீண்டும் பிரதமராகவோ, இப்போது உள்ள சபாநாயகர் மீண்டும் சபாநாயகராகவோ, இப்போது உள்ள எதிர்க்கட்சி தலைவர் மீண்டும் எதிர்க்கட்சி தலைவராகவோ இருக்கப்போவது நிச்சயமல்ல. தலைமை நீதிபதியும் 26–ந்தேதி ஓய்வு பெறப்போகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்வில் லோக்பால் அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்துவிட்டுச் செல்வது நல்ல மரபாகாது. ஏற்கனவே சீர்மிகு சட்ட இயல் வல்லுனர் என்ற முறையில் தேர்வு குழுவில் பணியாற்ற நீதிபதி கே.டி.தாமஸ், புகழ்பெற்ற வக்கீல் நரிமான் ஆகியோர் மறுத்துவிட்ட நிலையில் இப்படி அவசர கோலத்தில் அள்ளித்தெளிக்க முயற்சிப்பது நல்லதல்ல. 47 ஆண்டுகள் பொறுத்துவிட்டோம், மே 16–ந்தேதி புதிய அரசாங்கம் பதவி ஏற்கப்போகிறது, அவர்களிடம் இந்த பொறுப்பை பிரதமர் கொடுத்துவிடலாமே என்பதுதான் நாட்டு மக்களின் எண்ணமாகும்.

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Most Read