இரண்டு வாரங்களில் 3-வது முறை.. அக்னிபான் ராக்கெட் திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு


இரண்டு வாரங்களில் 3-வது முறை.. அக்னிபான் ராக்கெட் திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
x

இந்தியாவின் முதல் செமி கிரையோஜெனிக் என்ஜின் கொண்ட இந்த ராக்கெட், 300 கிலோ வரை எடையிலான ஆய்வுக் கலன்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

சென்னையைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய வளாகத்தில் தனியாா் ஏவுதளத்தை அமைத்துள்ளது.

அவ்வகையில், அக்னிகுல் நிறுவனம் 'அக்னிபான் சாா்டெட்' எனப்படும் சிறிய ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்தியாவின் முதல் செமி கிரையோஜெனிக் என்ஜின் கொண்ட இந்த ராக்கெட், 300 கிலோ வரை எடையிலான ஆய்வுக் கலன்களை புவி சுற்றுவட்டப்பாதைக்கு சுமந்து செல்லும் திறன் கொண்டது. 700 கி.மீ. தொலைவு வரை செல்லக் கூடியது.

இந்த ராக்கெட்டை சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் 22-ம் தேதி விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையால் ராக்கெட் செலுத்துவது ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் ராக்கெட்டில் இருந்த பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு, நேற்று (ஏப்ரல் 6) காலையில் ராக்கெட்டை செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கவுன்ட்டவுன் தொடங்குவதற்கு முன்பாக நிறுத்தப்பட்டு, இன்று ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ராக்கெட்டில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இன்றும் ராக்கெட் செலுத்தப்படவில்லை. இதனால் இரண்டு வாரங்களில் மூன்றாவது முறை ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்னர், ராக்கெட் செலுத்தப்படும் தேதியை அறிவிப்பார்கள்.


Next Story