பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.சி. எச்.விஸ்வநாத், காங்கிரசில் சேருகிறார்


பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.சி. எச்.விஸ்வநாத், காங்கிரசில் சேருகிறார்
x

காங்கிரசில் சேர இருப்பதாக பா.ஜனதா எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் அறிவித்துள்ளார். தனக்கு பா.ஜனதா அநீதி செய்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ராய்ச்சூர்:

அழைப்பு விடுக்கவில்லை

பா.ஜனதாவை சேர்ந்த எச்.விஸ்வநாத் எம்.எல்.சி., கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் காங்கிரசில் சேர உள்ளதாக தகவல் வெளியானது.

உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் பெங்களூரு வந்திருந்தபோது, மைசூரு மண்டல பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்களின் கூட்டத்தை நடத்தினார். அதில் பங்கேற்க எச்.விஸ்வநாத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்த நிலையில் தான் காங்கிரஸ் சேர முடிவு செய்துள்ளதாக எச்.விஸ்வநாத் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ராய்ச்சூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் மூத்தவன்

சித்தராமையாவும், நானும் ஒன்றாக வளர்ந்தவர்கள். 2 பேரும் ஒன்றாகவே சட்டம் பயின்றோம். அரசியலில் சித்தராமையாவை விட நான் மூத்தவன். அரசியல் என்பது ஒரு குடும்பம். அண்ணன்-தம்பி கருத்து வேறுபாட்டால் பிரிந்து செல்வது சகஜமானது. மீண்டும் ஒன்று சேருவதும் இயல்பு தான். பா.ஜனதாவில் எனக்கு அநீதி ஏற்பட்டுள்ளது. சட்டசபை இடைத்தேர்தலில் நான் தோல்வி அடைய விஜயேந்திரா தான் காரணம். நான் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளேன். எனது உடலில் காங்கிரஸ் ரத்தம் தான் ஓடுகிறது.

நான் பா.ஜனதா எம்.எல்.சி. அல்ல, இலக்கிய பிரிவில் எம்.எல்.சி.யாக உள்ளேன். நான் பா.ஜனதாவில் இருந்து ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டேன். ராஜினாமா கடிதம் வழங்கிய பிறகே எனக்கு எம்.எல்.சி. பதவி வழங்கப்பட்டது. நான் எந்த கட்சியிலும் இல்லை. சுதந்திரமாக உள்ளேன். சான்ட்ரோ ரவியிடம் பாம்பே பாய்ஸ்(மும்பையில் தங்கியிருந்த 17 எம்.எல்.ஏ.க்கள்) வீடியோ இருப்பதாக குமாரசாமி சொல்கிறார். அவர்களில் நானும் ஒருவன். அவ்வாறு ஏதேனும் வீடியோ இருந்தால் வெளியிடட்டும். குமாரசாமி பொய்யான தகவல்களை கூறுகிறார்.

முடிவு எடுப்பார்கள்

2 முறை முதல்-மந்திரியாக இருந்த அவர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசுவது சரியல்ல. அவர் 'ஹிட் அன்டு ரன்' அதாவது புகாரை கூறிவிட்டு ஓடிவிடுவது போன்ற அணுகுமுறையை கைவிட வேண்டும். சித்தராமையா கோலாரில் போட்டியிடுவதாக கூறியுள்ளார். வாக்காளர்கள் இறுதி முடிவு எடுப்பார்கள். எடியூரப்பா இல்லாத பா.ஜனதாவை நினைத்து கூட பார்க்க முடியாது.

இவ்வாறு எச்.விஸ்வநாத் கூறினார்.

எச்.விஸ்வநாத் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு தாவினார். அவருக்கு அக்கட்சியின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவி வழங்கப்படாததால் அதிருப்தியில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பா.ஜனதாவில் சேர்ந்தார். தற்போது மீண்டும் அவர் காங்கிரசில் சேர இருப்பதாக அறிவித்துள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.


Next Story