திருப்பதியில் தங்கும் விடுதி கட்டணம் பல மடங்கு உயர்வு: வாடகையை குறைக்க பக்தர்கள் கோரிக்கை


திருப்பதியில் தங்கும் விடுதி கட்டணம் பல மடங்கு உயர்வு: வாடகையை குறைக்க பக்தர்கள் கோரிக்கை
x

திருப்பதியில் தங்கும் விடுதி கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால், பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

திருப்பதி,

திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 6000 அறைகள் கட்டப்பட்டு உள்ளன. தரிசனத்திற்கு வரும் ஏழை எளிய மக்கள் தங்குவதற்காக ரூ.50, 100, 200 என அறை வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர கூடுதல் கட்டணத்திலும் அறைகள் உள்ளது. பக்தர்கள் அவர்களது வசதிக்கு ஏற்ப அறையை வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர்.

தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு வாடகைக்கு விடப்படும் அறைகளின் மின்விசிறி, கதவு, ஜன்னல்கள், குளியலறை, கழிவறை ஆகியவை போதிய பராமரிப்பின்றி உள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் வாடகை அறைகளை பராமரிக்க ரூ.110 கோடி டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் குடும்பத்துடன் வரும் பக்தர்கள் தங்குவதற்காக ஆங்காங்கே கெஸ்ட் ஹவுஸ்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த கெஸ்ட் ஹவுஸ்களில் ஏ.சி., வெண்ணீர் வசதியுடன் அறைகள் சீரமைக்கப்பட்டன. நாராயணகிரி கெஸ்ட் ஹவுஸில் ரூ.500, ரூ.600-க்கு வாடகைக்கு விடப்பட்ட அறைகள் தற்போது சீரமைக்கப்பட்ட பின் ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.1,700 ஆக உயர்த்தி உள்ளனர். இதேபோல் நந்தகம், வகுளமாதா, பாஞ்ச ஜன்யம், கவுஸ்துபம் உள்ளிட்ட காட்டேஜ்களின் அறை வாடகை ஜி.எஸ்.டி-யுடன் 2,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறப்பு காட்டேஜ்களில் ரூ.750 ஆக இருந்த அறை வாடகை ஜி.எஸ்.டி-யுடன் ரூ.2,800 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் வாடகைக்கு அறை எடுக்க வேண்டும் என்றால் வைப்புத்தொகையுடன் ரூ.3,400 செலுத்தினால் மட்டுமே அறைகள் கிடைக்கும். இதனால் தரிசனத்திற்கு வரும் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்:- எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தேவஸ்தானம் அறை வாடகையை பல மடங்கு உயர்த்தி உள்ளது. அறை வாடகை உயர்த்துவது குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. மாநில அரசுக்கும் தெரிவிக்கவில்லை. தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு சேவையாக வழங்கப்பட்ட அறை வாடகையை தேவஸ்தான அதிகாரிகள் வியாபாரமாக மாற்றிவிட்டனர்.

எனவே உயர்த்தப்பட்ட அறை வாடகையை குறைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதியில் நேற்று 45,887 பேர் தரிசனம் செய்தனர். 17,702 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.


Next Story